‛‛7 பேர் உடல் கருகி பலி’’.. பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து.. டெல்லியை சூழ்ந்த கரும்புகை
டெல்லி: டெல்லி அருகே அலிபூர் மார்க்கெட்டில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர்.
டெல்லி அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.15 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் தீ பற்றி எரிந்தது. இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தொழிற்சாலைில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் ரசாயணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீயின் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்தது. இதையடுத்து கூடுதலாக 14 தீயணைப்பு வாகனங்கள் வரவைழக்கப்பட்டன. தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தொழிற்சாலையில் பிடித்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் கரும்புகை அதிகளவில் சூழ்ந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு தொழிற்சாலையில் யாரேனும் சிக்கி உள்ளனரா? என தீயணைப்பு வீரர்கள் பார்த்தனர்.
அப்போது 3 பேர் உடல் கருகி இறந்தது தெரியவந்தது. அதன்பிறகு மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதன்மூலம் தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை என்பது 7 ஆக அதிகரித்தது. அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் தற்போது வரை தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனாலும் தீவிபத்துக்கு முன்பு தொழிற்சாலையில் பயங்கர வெடிசத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதுதான் தீவிபத்துக்கு காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது பற்றி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications