அப்படி போடு.. அரசு ஊழியர்களுக்கு இரவோடு இரவாக.. வந்த நல்ல செய்தி.. வருகிறது 8வது ஊதியக்குழு!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓர் முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து மாநில அரசுகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) உடன் இணைந்த தொழிற்சங்கங்களின் உச்ச அமைப்பான அரசு ஊழியர் தேசிய கூட்டமைப்பின் (GENC) பிரதிநிதிகள் குழு, கடந்த மாதம் மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தது. இந்த சந்திப்பில், 8வது ஊதியக் குழுவை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த ஆண்டு ஜனவரியில் 8வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. ஊழியர்கள், முக்கிய குழு உறுப்பினர்களின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவுக்கான பணிகள் குறித்த இறுதியான அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆகஸ்ட் 4 அன்று நடந்த கூட்டத்தில், 8வது ஊதியக் குழு தாமதம், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை ரத்து செய்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுத்தல், கோவிட்-19 காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை வெளியிடுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பிரதிநிதிகள் குழு முன்வைத்தது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் மற்றும் அமைச்சரின் பதில்கள்:
8வது மத்திய ஊதியக் குழு அமைத்தல்:
பிரதிநிதிகள் குழு, 8வது மத்திய ஊதியக் குழுவை அவசரமாக அமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் சிங், "அரசு மாநில அரசுகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. 8வது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு விரைவில் அறிவிக்கப்படும்" என்று உறுதியளித்தார். 8வது மத்திய ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஊதியக் குழு 2028ஆம் ஆண்டுக்குள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி ஊதியக் குழு உருவாக்கப்படுவது சாத்தியமில்லை என்ற அறிக்கை, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் அறிக்கையின்படி, 8வது மத்திய ஊதியக் குழு 2026 இறுதி அல்லது 2027 ஆரம்பம் வரை அமல்படுத்தப்படாமல் போகலாம். அரசு இன்னும் பணி வரம்புகளை இறுதி செய்யாததுடன், குழு உறுப்பினர்களை நியமிக்காததும் இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
8வது மத்திய ஊதியக் குழு
முந்தைய 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்ட பின் அறிக்கை சமர்ப்பிக்க சுமார் 1.5 ஆண்டுகள் ஆனது. மேலும், அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு அமல்படுத்த 3-9 மாதங்கள் பிடித்தன. இதே கால அளவைப் பின்பற்றினால், 8வது ஊதியக் குழுவையும் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம். இந்த அறிக்கை, 8வது ஊதியக் குழுவின் சாத்தியமான நிதிச்சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.6-0.8% ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஊதியக் குழுக்களின் சுமைக்கு இணையாக இருக்கும். இதன் மூலம் அரசுக்குக் கூடுதலாக ₹2.4-3.2 லட்சம் கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஊதியக் கட்டமைப்பின்படி, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ₹18,000 (நிலை 1) முதல் ₹2,50,000 (நிலை 18) வரை உள்ளது. நிலை 15இல் குறைந்தபட்சம் ₹1,82,200 சம்பளம் பெறும் ஊழியரின் ஊதியம், அதே காரணியைப் பயன்படுத்தி ₹3,78,976 ஆக உயரலாம். அதேபோல், நிலை 16இல் ₹2,05,400 பெறும் ஊழியர்கள் ₹4,27,232 ஆக ஊதிய உயர்வு பெறக்கூடும்.
8வது மத்திய ஊதியக் குழு: எப்போது வரும்?
சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழுவின் அறிவிப்புக்காக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சுமார் ₹1.8 லட்சம் கோடி தொகையை மத்திய அரசு இதற்காக ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்பிட் கேபிடல் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைப்படி, புதிய ஊதிய அமைப்பு ஒட்டுமொத்த ஊதியத்தில் 30-34% வரை உயர்வுக்கு வழிவகுக்கும்.
இந்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டால், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் பயனடைவார்கள். 2026 அல்லது 2027 நிதியாண்டில் இது நடைமுறைக்கு வரலாம். மேலும், அரசாங்கத்தின் செலவில் சுமார் ₹1.8 லட்சம் கோடி கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
8வது மத்திய ஊதியக் குழு: தாமதம்
தற்போதைய சம்பளம் மற்றும் ஓய்வூதிய அமைப்பு, ஜனவரி 2016 முதல் நடைமுறையில் உள்ள 7வது ஊதியக் குழுவின் அடிப்படையிலானது. பொதுவாக, வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை ஊதிய அமைப்பைத் திருத்துவதற்காக புதிய குழு அமைக்கப்படுவது வழக்கம்.
8வது ஊதியக் குழுவும் இந்த நடைமுறையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் திருத்தத்தின் முக்கிய அம்சம், புதிய அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கப் பயன்படும் "ஃபிட்மென்ட் காரணி" ஆகும். இந்த காரணி 1.83 முதல் 2.46 வரை இருக்கலாம் என அம்பிட் கேபிடல் மதிப்பிட்டுள்ளது.
8வது மத்திய ஊதியக் குழு: சம்பளம் எவ்வளவு?
இதன் பொருள், தற்போது ₹18,000 ஆக உள்ள குறைந்தபட்ச சம்பளம், 1.83 காரணியில் ₹32,940 ஆகவும், 2.46 காரணியில் ₹44,280 ஆகவும் உயரக்கூடும். உதாரணமாக, தற்போது ₹50,000 அடிப்படை சம்பளம் பெறுபவரின் சம்பளம், குறைந்தபட்ச ஃபிட்மென்ட் காரணியில் ₹91,500 ஆகவும், அதிகபட்ச ஃபிட்மென்ட் காரணியில் ₹1.23 லட்சமாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதிய ஊதியக் குழு பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகமாக செயல்படும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அதிக சம்பளம் காரணமாக நுகர்வு அதிகரிக்கும். இதன் விளைவாக, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் அதிக செலவு செய்ய வழிவகுக்கும். இத்தகைய பெரிய ஊழியர் பிரிவினருக்கு ஊதிய உயர்வு வழங்குவது, சில்லறை வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் சேவைத் துறைகள் போன்ற பல்வேறு துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications