எல். முருகன் தலித் மினிஸ்டர்.. அவரை Unfit என டிஆர் பாலு சொல்வதா? லோக்ச்பாவில் ட்விஸ்ட் செய்த பாஜக!
டெல்லி: லோக்சபாவில் தமிழ்நாட்டு உரிமைக்காக குரல் கொடுத்த போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை திமுக எம்பி டிஆர் பாலு, குறுக்கிட்டு கொண்டே இருப்பதால் எம்பியாக இருக்கவே நீங்க தகுதியற்றவர் என விமர்சித்தார். ஆனால் பாஜகவினரோ, தலித் மத்திய அமைச்சரை Unfit என டிஆர் பாலு விமர்சித்துவிட்டதாக திசை திருப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கடுமழையால் வெள்ளம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இயற்கை பேரிடர்கள் தாக்கியது தொடர்பாக மத்திய குழுவும் ஆய்வு செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆய்வு நடத்தினார்.

ராஜ்யசபாவில் ஆ.ராசா: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ37,000 கோடி தர வேண்டும் என்பது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை. தமிழ்நாட்டுக்கு இந்த நிமிடம் வரை எந்த ஒரு வெள்ள நிவாரண நிதியையும் மத்திய அரசு தரவே இல்லை. தமிழ்நாட்டுக்கு முறைப்படி தர வேண்டிய நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சகம் செய்வதைக் கண்டித்து ராஜ்யசபாவில் நேற்று திமுக எம்பி திருச்சி சிவா ஆவேசமாக, புள்ளி விவரங்களுடன் அடுக்கினார். இன்று லோக்சபாவில் ஆ.ராசா, டிஆர் பாலு ஆகியோரும் மத்திய அரசு வெளுத்தெடுத்தனர்.
டிஆர் பாலு பேச்சும் எல்.முருகன் குறுக்கீடும்: லோக்சபாவில் இன்று முதலில் ஆ.ராசா பேசினார். பின்னர் டிஆர் பாலு பேசுகையில் மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் முதலில் குறுக்கிட்டார். பின்னர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடர்ந்து குறுக்கிட்டு டிஆர் பாலுவை பேசவிடாமல் தடுக்க முயற்சித்தார். இதனால் டிஆர் பாலு தமது கருத்தை முன்வைக்க முடியாமல் கொந்தளித்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த டிஆர் பாலு, நாடாளுமன்றத்தில் ஒருவர் பேசும் போது இப்படி குறுக்கிட்டுக் கொண்டே இருப்பதா? நீங்கள் ஒரு எம்பியாக இருக்கவே தகுதி இல்லாதவர் என எல். முருகனிடம் கொந்தளித்தார். உடனே பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு டிஆர் பாலு மீது பாய்ந்தனர். டிஆர் பாலுவுக்கு ஆதரவாக திமுக எம்பிக்கள் இணைந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் திமுக எம்பிக்கள், மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
அர்ஜூன் மேக்வால் ஆவேசம்: லோக்சபாவில் டிஆர் பாலு கருத்துக்காக அவரை விமர்சித்து மல்லுக்கட்டிய மத்திய அமைச்சர்கள் இரண்டு பேர். ஒருவர் அர்ஜூன் மேக்வால். மற்றொருவர் பிரகலாத் ஜோஷி. முதலில் டிஆர் பாலுவுடன் மோதிய அர்ஜூன் மேக்வால், எங்க அமைச்சரை எப்படி Unfit என சொல்லலாம்? உங்க விமர்சனத்தை வாபஸ் வாங்குங்க.. சபை குறிப்பில் இருந்து அதை நீக்குங்க என்றார்.
தலித் அமைச்சர் என திசை திருப்பிய பாஜக: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், அதெப்படி Unfit என சொல்லலாம்? திமுக அரசுதான் தகுதி இல்லாத அரசு. காங்கிரஸ்தான் தகுதி இல்லாத கட்சி என்று கூறியதுடன் அடுத்ததாக, ஒரு தலித் அமைச்சரை(எல்.முருகனை) எப்படி Unfit என சொல்லலாம்? ஒட்டுமொத்த தலித் சமூகத்தையே டிஆர் பாலு அவமதித்துவிட்டார் என திசை திருப்பிவிட்டார். இதற்கு ஆதரவாக பாஜக எம்பிக்கள், டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷம் போட அமளி துமளியானது லோக்சபா.












Click it and Unblock the Notifications