பத்திரப்பதிவு + ஆதார்.. குட்நியூஸ் வரப்போகுது... மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம்
டெல்லி: பத்திரப்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல என்றும் விருப்பம் இருந்தால் மட்டும் ஆதாரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆதார் எண் வாங்கித்தான் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை கட்டாயம் அல்ல என்றும் ஆதார் எண் இல்லாததற்காக, யாருக்கும் பத்திரப்பதிவு மறுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு செய்வதற்கு இப்போது சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆதார் கட்டாயமாக வாங்கப்படுகிறது. ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து பதிவுத்துறையில் அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் ஒரே நொடியில் கண்டுபிடித்துவிட முடியும். பழைய சொத்துக்களுக்கு ஆதார் விவரம் இல்லை என்பதால் புதிய சொத்துக்களை தான் ஆதார் அடிப்படையில் கண்டுபிடிக்க முடியும். ஆதார் மூலம் ஒருவரின் அடையாளம் சரிபார்க்கப்படுவதால், முறைகேடுகள் குறையும் என்று அரசுகள் நம்புகின்றன. அந்த வகையில் ஆதார் எண் இல்லாதவர்களால் பத்திரப்பதிவு செய்யவே முடியாது என்கிற நிலை தான் இந்தியாவில் இருக்கிறது.

பத்திரப்பதிவு சட்டம்
இந்நிலையில் பத்திரப்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் அல்ல என்றும் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள பத்திரப்பதிவு சட்டம் 117 ஆண்டுகால பழமையான சட்டம் ஆகும். இதன்கீழ், அசையா சொத்துகள் தொடர்பான கிரய பத்திரம், தான பத்திரம், அடமான பத்திரம், குத்தகை பத்திரம், உயில், பொது அதிகார பத்திரம், சொத்து உரிமை தொடர்பான கோர்ட் உத்தரவுகள் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
ஆதார் எண் கட்டாயம் இல்லை
இந்நிலையில், பத்திரப்பதிவு சட்டத்துக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய வரைவு மசோதாவை உருவாக்கி இருக்கிறது. மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை தயாரித்துள்ள இந்த மசோதா, பொதுமக்களின் கருத்துகேட்புக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில், பத்திரப்பதிவு செய்பவர்களின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வரைவு மசோதாவில், ஆதார் எண் கட்டாயம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கு வருபவரின் விருப்பத்தின்பேரில், ஆதார் எண்ணை பயன்படுத்தி சரிபார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவுக்கு மறுக்கக்கூடாது
ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் எண் பயன்படுத்த விரும்பாதவர்கள் ஆகியோருக்கு மாற்று வழிமுறைகள் மூலம் சரிபார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாததற்காக, யாருக்கும் பத்திரப்பதிவு மறுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை தலைவர்
தற்போதைய சொத்து பரிமாற்ற நடைமுறைகளை கருத்தில்கொண்டு, கட்டாயமாக பதிவு செய்ய வேண்டியவை பட்டியலும், அவற்றுக்கு தேவையான ஆவணங்கள் பட்டியலும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறை தலைவர், பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் ஆகியோர் நியமனத்துக்கான நடைமுறைகளும் வரைவு மசோதாவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவுத்துறை கூடுதல் தலைவர், உதவி தலைவர் ஆகிய பதவிகள் அறிமுகம் உள்பட பதிவுத்துறையின் அமைப்புரீதியான கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட உள்ளது. காலியிடங்களில் சார்பதிவாளர் நியமன முறை விவரிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களும், சிறு வணிகர்களும் பலன் அடையும் வகையில் எளிய மொழிநடையுடன் பத்திரங்கள் உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் இருக்கும் என்கிறது மத்திய அரசு.
ஆவணங்கள் பதிவு
தற்போதைய சட்டப்படி, ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், புதிய வரைவு மசோதா, நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மோசடிகளை தவிர்ப்பதற்காக, ஆன்லைன் மூலம் ஆவணங்கள் அளித்தவர்கள், பத்திரத்தை பெறுவதற்கு முன்பு, சார்பதிவாளர் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் கருவி
தற்போதைய சட்டப்படி, பத்திரத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விரல் ரேகை ஆகியவை வைக்கப்பட வேண்டும். ஆனால், புதிய மசோதாவில், கையெழுத்து மற்றும் வண்ண புகைப்படம் அளிக்கலாம், அல்லது, டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்படலாம், விரல் ரேகையை சாதாரணமாகவோ, பயோமெட்ரிக் கருவி மூலமாகவோ அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டாயம் 'பான்' எண் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீடு
பத்திரப்பதிவு செய்வதை மறுப்பதற்கான காரணங்களும் புதிய வரைவு மசோதாவில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பத்திரம் பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறையும் கூறப்பட்டிருக்கிறது. சார்பதிவாளர் அலுவலகத்தில், கம்ப்யூட்டர், ஸ்கேனர், கிளவுடு ஸ்டோரேஜ் போன்ற கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த வரைவு மசோதா அனுமதி அளிக்கிறது.












Click it and Unblock the Notifications