பாரத மாதாவை அவமானப்படுத்திய பாகிஸ்தானுடன் மேட்சா? பாக். வீரர் பொம்மையை எரித்த AAP தலைவர்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாரதமாதாவை அவமானப்படுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீம் அஷ்ரப், சர்ச்சைக்குரிய போஸ்ட்டை பதிவிட்டிருந்தார். இப்படிப்பட்ட நபரை கொண்ட பாகிஸ்தான் அணியுடன் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பகீம் அஷ்ரபின் உருவ பொம்மையை ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் டெல்லி மாநில தலைவருமான சௌரப் பரத்வாஜ் எரித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்குதலை மேற்கொண்டது. இதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்தியா முன்னெடுத்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையை, எல்லை தாண்டிய தாக்குதலாக புரிந்துக்கொண்ட பாகிஸ்தான் நம்மீது பதில் தாக்குதலை நடத்தியது.
இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையில் சண்டை தீவிரமடைந்தது. இறுதியில் பாகிஸ்தானில் எந்த யுக்தியும் கை கொடுக்காததால், இந்தியாவிடம் சரணடைந்தது.
இந்த சண்டையின்போது இரு தரப்பிலும், மக்கள் கொந்தளிப்பாக இருந்தனர். குறிப்பாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவை அவதூறாக சித்தரித்திருந்தனர். இந்த கீழ்த்தரமான வேலையை செய்தவர்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீம் அஷ்ரப்பும் ஒருவர். அவர் பாரதமாதாவை அவதூறாக சித்தரித்திருந்தார். இப்படிப்பட்ட நபர் கொண்டிருக்கும் அணியுடன் இந்தியா நாளை கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியின் முன்னாள் எம்எல்ஏவும், ஆம் ஆத்மியின் டெல்லி தலைவருமான சௌரப் பரத்வாஜ், பகீம் அஷ்ரப்பின் உருவ பொம்மையை எரித்து அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மட்டுமல்லாது பணம் மற்றும் வணிக நலன்களுக்காக, இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட அனுப்பியதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசையும், பிசிசிஐ அமைப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பகீம் அஷ்ரப்பின் உருவ பொம்மையை எரிக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications