"டெல்லி, பஞ்சாப் பக்கமே வராதீங்க.. நாங்களும் உங்க லைனில் வர மாட்டோம்!" காங்-க்கு ஆம் ஆத்மி ஆஃபர்
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் சந்திக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி ஒரு ஆப்பரை கொடுத்துள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் நின்று இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் எனப் பல தேசிய தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இதற்காக நாடு முழுக்க இருந்த எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். மேலும், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தையும் அவர் நடத்த உள்ளார்.
எதிர்க்கட்சிகள்: இருப்பினும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வருவது ஒன்னும் அவ்வளவு ஈஸியானது இல்லை. டெல்லி, பஞ்சாபில் காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே தான் கடும் போட்டி. அதேபோல காங்கிரஸ் திரிணாமுல் காங். இடையே மோதல் போக்கு இருக்கிறது. இந்தக் கசப்புகளை எல்லாம் தாண்டி அவர்கள் ஒரே அணியில் வருவது எல்லாம் அவ்வளவு ஈஸியானது இல்லை.
இதற்கிடையே ஆம் ஆத்மி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆப்பரை கொடுத்துள்ளனர். அதாவது டெல்லி, பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஆம் ஆத்மி போட்டியிடாது என ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளரும் டெல்லி அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். மேலும், 2024ல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வந்தால் நாடு மன்னராட்சிக்குச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
மன்னராட்சி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சௌரப் பரத்வாஜ், "வரும் தேர்தலில் மட்டும் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தால் அவர் (மோடி) அரசியலமைப்பை மாற்றி, உயிருடன் இருக்கும் வரை நாட்டின் மன்னராகத் தன்னை அறிவிக்கக் கூட வாய்ப்புள்ளது.. இப்போதே சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை எதிர்க்கட்சி தலைவர்களைச் சிறையில் தள்ளும் நடவடிக்கையிலேயே இறங்கியுள்ளனர்" என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் குறித்துப் பேசிய அவர், "நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸில் இப்போது தலைவர்களுக்கு மட்டுமின்றி ஐடியாக்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாங்கள் கொண்டு வந்த நீர், மின்சாரம் மற்றும் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களை முதலில் காங்கிரஸ் விமர்சித்தது. இப்போது அவர்களே எங்கள் திட்டத்தைக் காப்பி பேஸ்ட் செய்கிறார்கள்
நாங்கள் போட்டியிட மாட்டோம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் அறிக்கைகளை உத்தரவாதம் என்று பெயர்மாற்றம் செய்து காங்கிரஸ் கட்சி நகலெடுத்து வருகிறது. டெல்லி, பஞ்சாப் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றால், நாங்களும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் போட்டியிட மாட்டோம். அவர்களே முடிவு செய்யட்டும்" என்று அவர் தெரிவித்தார்.
டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம் குறித்த மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல எதிர்க்கட்சிகளிடம் தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார். இருப்பினும், இதற்குக் காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமை பேசக்கூடாது என்று டெல்லி காங்கிரஸ் பிரிவு கேட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியானது. இந்தநிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications