ராஜ்யசபா இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார் அபிஷேக் சிங்வி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த கேஷவ் ராவ், சமீபத்தில் தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அத்துடன், தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருந்த நிலையில், எம்.பி பதவியை ராஜினாமா செய்தால் அங்கு காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தெலுங்கானாவில் காலியாகும் ஒரு ராஜ்யசபா எம்.பி பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் சிங்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, பிரபலமான உச்சநீதிமன்ற வழக்கறிஞர். முன்னர் திரிணமுல் காங்கிரஸ் தரப்பிலிருந்து ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர். ஆனால், இவருக்கு மீண்டும் சீட் தர மம்தா மறுத்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களே மாற்றி ஓட்டு போட்டதால் பா.ஜ.க வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனிடம் தோல்வி அடைந்தார் அபிஷேக் சிங்வி.
இந்நிலையில், தெலுங்கானாவில் இருந்து ராஜ்யசபா வேட்பாளராக காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார் சிங்வி. செப்டம்பர் 3 ஆம் தேதி ராஜ்யசபா இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், காலியாக உள்ள இடத்தில் வெற்றி பெற்று, ராஜ்யசபாவில் இடம்பிடிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications