தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்.. நீதி கேட்டு டெல்லி தமிழ்நாடு இல்லம் முன் ஏபிவிபி அமைப்பு ஆர்ப்பாட்டம்
டெல்லி: தஞ்சை மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பாக ஏபிவிபி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் அரியலூர் வடுகர்பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் படித்து வந்தார்.
இவர் கடந்த ஜன.9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், சிகிச்சைக்காக அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,
இந்தச் சூழலில் மாணவியைப் பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியாக புகார்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு போலீசார் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தமிழக போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனப் பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்தச் சூழலில், தஞ்சை மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பாக நேற்று ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் வைகை இல்லத்திற்கு முன்பு குவிந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், சுமார் 30 நிமிடங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஏபிவிபி அமைப்பினர், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
கொரோனா காலத்தில் அனுமதியின்றி ஏபிவிபி அமைப்பினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தால் தமிழ்நாடு இல்லம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications