பீகார், மபியில் “இந்தியா”வை காணோம்.. “மெகா” வெற்றிக்கு தயாராகும் பாஜக - நியூஸ் 18 கருத்துக்கணிப்பு
டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் ஜுரம் நாடு முழுவதும் தீவிரமடைந்து இருக்கிறது. தேர்தல் தேதி இந்த மாதம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஏப்ரல் மாதம் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்பமனு தாக்கல், வேட்பாளர் நேர்காணல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என மிக வேகமாக பணியில் இறங்கி இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் தரப்பிலும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தொடங்கி இருக்கின்றன. ஏராளமான ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்களுடன் இணைந்து கடந்த சில நாட்களாக இந்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நியூஸ் 18 - சி.என்.என். சார்பில் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் நாடு முழுவதும் ஆளும் பாஜக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது? பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு என்ன? பாஜக அரசின் செயல்பாடுகள் பொதுமக்களை திருப்தி படுத்தி இருக்கிறதா? எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த கட்சிகளுக்கு அதிக வெற்றி வாய்ப்பு? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கு மக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளார்கள்.
அதன்படி எந்தெந்த மாநிலங்களில் எந்த கூட்டணிக்கு அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பீகார் மத்திய பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் எந்த கூட்டணி அதிக தொகுதிகளில் வெல்லும் என்ற விபரங்களை நியூஸ்18 தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது.
அதன்படி பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 29 தொகுதிகளில் 28 இல் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications