அதானி பவர்.. ஆந்திர அதிகாரிகளுக்கு பெரிய தொகை கைமாறியது? லிஸ்டில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள்
டெல்லி: சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் கௌதம் அதானி மற்றும் ஏழு பேர் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. இதில் தமிழ்நாடு ஆந்திரா உள்பட நான்கு மாநிலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. குறிப்பாக மின்சார விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு ஒரு பெரிய தொகை கைமாறியதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியாவின் 2-வது பெரிய பணக்காரராக இருக்கும் 62 வயதாகும் கௌதம் அதானி குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெரும் தொழில் அதிபர் ஆவார். கௌதம் அதானி தான் இந்தியாவின் முக்கியமான துறைமுகங்கள், விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறார். இதேபோல் இந்தியா முழுவதும் நிலக்கரி, மின்உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறார். இதுதவிர ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் கெளதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அதானியின் நிறுவனம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பங்கு வர்த்தக பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு குற்றம்சாட்டியது. அந்த பிரச்சனை ஓய்ந்து அதானி மீண்ட நிலையில், அடுத்ததாக பெரிய பிரச்சனை அதானிக்கு வந்துள்ளது. இந்த முறை தனியார் நிறுவனம் அல்ல. அமெரிக்காவே நேரடியாக அதானி மீது குற்றம்சாட்டியுள்ளது.
சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்காவில் சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த புகாரில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்புள்ள சூரிய ஒளி மின்சார திட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அதானி நிறுவனம், கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்த சில அதிகாரிகளுக்கு 265 கோடி டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.2,200 கோடி) லஞ்சமாக கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மற்றும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி இடையேயான காலக்கட்டத்தில் ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சூரிய மின் திட்ட வினியோக ஒப்பந்தங்களை அதானி நிறுவனம் பெற்றிருக்கிறது. சுமார் ரூ.16 ஆயிரம் கோடி லாபம் ஈட்டக்கூடிய இந்த ஒப்பந்தங்களுக்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கடன் தருபவர்களிடம் இருந்து 300 கோடி டாலருக்கு மேல் கடனாகவும், பத்திரமாகவும் அதானி நிறுவனம் பெற்றிருக்கிறது.
மேலும் இந்த ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் அதானியே நேரில் சந்தித்ததற்கான ஆதாரங்களும் இருக்கிறது என நியூயார்க் மாகாண துணை அட்டர்னி ஜெனரல் லிசா மில்லர், நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொழில் அதிபர் அதானி, அவருடைய மருமகன் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் தான் அதானி மற்றும் சாகர் அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளதாக கோர்ட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை சர்வதேச சட்ட அமலாக்கத்துறைக்கு அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே சூரிய ஒளி மின் திட்ட வினியோக ஒப்பந்தம் பெற ஆந்திர அதிகாரிகளுக்கு பெரியதொகை கைமாறியது என்ற பரபரப்பு தகவல் அமெரிக்க குற்றச்சாட்டில் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ள தகவலின் படி, அதானி குழுமம் கடந்த 2021-ம் ஆண்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரிய ஒளி மின் ஆலைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதற்கான முயற்சியை செய்திருக்கிறது.
ஆனால் அந்த மின்சாரத்தை வாங்க மாநில அரசுகள் நிர்ணயித்த விலை ஒத்துப்போகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் 2021-ம் ஆண்டில் ஆந்திர மாநில உயர் அதிகாரிகளை அதானியே நேரில் சந்தித்து பேசினார்களாம்.. அதாவது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7, செப்டம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் அதானி அந்த அதிகாரியை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர் ஆந்திர மாநில அரசு (ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு) 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வாங்க ஒப்புக்கொண்டதாம். இதற்காக ஆந்திர அதிகாரிகளுக்கு மிகப்பெரிய தொகை கைமாறியதாகவும், இதே வழியில் ஒடிசா மாநிலமும் (நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி) 500 மெகாவாட் மின்சாரத்தை அதானி நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட மின்சார ஒப்பந்தத்தை முதலில் வழங்கிய மத்திய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ஜூலை 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் ஆந்திராவை பின்பற்றி ஒடிசா, ஜம்மு மற்றும் காஷ்மீர், சத்தீஸ்கர், தமிழ்நாடு -- சூரிய மின்சக்திக்கு கையெழுத்திட முடிவு செய்தன என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சத் திட்டத்தை மறைக்க குறியீட்டுப் பெயர்களைப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உதாரணமாக, கௌதம் அதானியை "நுமெரோ யூனோ" அல்லது "தி பிக் மேன்" என்று அழைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள கௌதம் அதானி, அனைத்து பிரச்சனைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications