தரமான சம்பவம் செய்த ஆதித்யா எல்-1 விண்கலம்! இஸ்ரோ கொடுத்த முக்கிய அப்டேட்
டெல்லி: சூரியனின் மிகவும் வெப்பமான, ஆற்றல்மிக்க பகுதியை ஆதித்யா எல்-1 புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. சூரிய புயல் மூலம் பூமிக்கு ஏற்படும் ஆபத்தை அறிந்துக்கொள்ள இது பயன்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சூரியனின் இந்த பகுதியை 'கர்னலின்' என்று சொல்லுவார்கள். இதனை விண்கலத்தில் இருந்த SUIT பேலோடு படம் பிடித்திருக்கிறது. ஆதித்யா எல்-1 எடுத்து அனுப்பிய படத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதா கதிர்களையும் சூரிய புயல்களையும் ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை இஸ்ரோ கடந்த 2023ம் ஆண்டு அனுப்பி இருந்தது. இந்த விண்கலம் கடந்த 22ஆம் தேதி சூரியனின் மிகவும் வெப்பமான ஆற்றல் மிகுந்த பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்திருக்கிறது. இந்த புகைப்படத்தை வைத்து, சூரிய புயல்கள் பூமியை எவ்வாறு தாக்குகின்றன? சூரியனின் கதிர்வீச்சுகள் பூமியை எவ்வாறு பாதிக்கின்றன? என்பது குறித்து விஞ்ஞானிகளால் ஆய்வு செய்ய முடியும்.
பூமிக்கு மிக ஆபத்தானதாக சூரிய புயல்கள் இருக்கின்றன. இன்றைய தேதியில் பூமியில் உள்ள அணுமின் நிலையங்கள் மின்னணு தொழில்நுட்ப உதவியால்தான் இயக்கப்பட்டு வருகின்றன. செயற்கை கோள்கள், கார், ரயில், விமான போக்குவரத்து உள்ளிட்டவை கூட மின்னணு தொழில்நுட்பத்தால்தான் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சூரியனிலிருந்து வெளிவரும் சூரிய புயல்கள் இந்த மின்னணு தொழில்நுட்பத்தை முற்றிலுமாக பாதிக்கும் சக்தி கொண்டது.
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய புயலால் பூமியில் தந்தி வட கம்பிகள் பாதிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். நல்வாய்ப்பாக அந்த புயல் வந்த போது பெரியதாக மின்னணு துறை வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் சூரிய புயல்கள் பூமியை தாக்குமேயானால் பூமி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 100 வருடங்களாக ஆகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இது போன்ற பேரழிவிலிருந்து பூமியை பாதுகாக்க சூரியன் குறித்து முழுமையாக ஆய்வு செய்வது அவசியமாகும். எனவேதான் இஸ்ரோ ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்பியிருந்தது. இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இதுதான். இது எடுத்து அனுப்பியுள்ள புகைப்படம் சர்வதேச விண்வெளி ஆய்வில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
சூரியனில் வெடிப்பு ஏற்படுவதால்தான் அதிலிருந்து வெப்பம் வெளியாகிறது என்றும், அந்த வெப்பம் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இந்த புகைப்படம் பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில் சூரிய வெடிப்பிலிருந்து பூமியை காப்பாற்றுவது இஸ்ரோவாகக்கூட இருக்கலாம்.












Click it and Unblock the Notifications