98% வரை உயிரிழப்பை தடுக்கும் கோவிஷீல்டு.. அதுவும் டெல்டா கொரோனாவுக்கு எதிராக.. ஆய்வில் சூப்பர் தகவல்
டெல்லி: கோவிஷீல்டு வேக்சின் கொரோனாவுக்கு எதிராக 93% வரை தடுப்பாற்றல் தருவதாகவும், கொரோனா உயிரிழப்புகளை 98% வரை தடுப்பதாகவும் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி (AFMC) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த இப்போது அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

வேக்சின் பணிகள்
இந்தியாவிலும் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் வேக்சின் போடப்பட்ட நிலையில், அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இப்போது 18+ அனைவருக்கும் வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆய்வு
நான்கு வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும்கூட இந்தியாவில் பெரும்பாலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வேக்சின்களை கொண்டே தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனா ஏற்படுவதை சுமார் 98% வரை தடுப்பதாக Armed Forces Medical College எனப்படும் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

98% வரை உயிரிழப்பைத் தடுக்கிறது
இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த சோதனை நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மத்தியில் நடத்தப்பட்டது. அதில் கோவிஷீல்டு வேக்சின் 93% வரை கொரோனாவில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளை இது 98% வரை தடுக்கிறது. அதிலும் இந்த ஆய்வு டெல்டா கொரோனா உச்சத்தில் இருந்த 2ஆம் அலை சமயத்தில் நடத்தப்பட்டது என்பதும் முக்கியமானது.

கொரோனா பாதிப்பு
அதேநேரம் வேக்சின் எடுத்துக்கொண்டால் கொரோனா பாதிப்பு நிச்சம் ஏற்படாது என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், தீவிரமான கொரோனா பாதிப்பு ஏற்படுவதை வேக்சின்கள் தடுக்கிறது. எனவே, பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நமது வேக்சின்களில் நம்பிக்கை வையுங்கள். தைரியமாக வேக்சின் எடுத்துக் கொள்ளுங்கள். அதேநேரம் வேக்சின் பணி முடியும் வரை வரும் சில மாதங்களுக்கு நமது எச்சரிக்கையை நாம் தளர்த்திவிடக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

டெல்டா கொரோனா
கோவிஷீல்டு வேக்சின் சிறப்பான பலனைத் தருவது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அதிலும் இந்த சோதனை டெல்டா கொரோனா உச்சத்தில் இருந்த போது நடந்துள்ளது. டெல்டா கொரோனாவுக்கு எதிராக பைசர், மாடர்னா உள்ளிட்ட வேக்சின்களின் தடுப்பாற்றல் குறைவதாகக் கூறப்படும் நிலையில், கோவிஷீல்டு 90% மேல் பலன் அளிப்பது நல்லதொரு விஷயமாகும். பொதுமக்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவில் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு வேக்சின்
இந்தியாவில் கோவிஷீல்டு வேக்சினை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. நாட்டில் தற்போது இருக்கும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை. இதனால் பல்வேறு இடங்களிலும் வேக்சின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வேக்சின் பற்றாக்குறை முழுவதுமாக நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications