கோவிஷீல்டு மட்டுமில்லை.. கோவாக்சின் கூட அரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்! பரபர ஆய்வு முடிவுகள்
டெல்லி: கோவிஷீல்ட் வேக்சின் சில அரிதான பக்க விளைவுகள் கண்டறியப்பட்டது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இப்போது கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் சில பக்க விளைவுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா அதன் பிறகு உலகை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் வரை ஆகிவிட்டது.

தடுப்பூசி: அந்தக் காலகட்டத்தில் கொரோனா வேக்சின் தான் பலரது உயிர்களையும் காப்பாற்றியது. இதற்கிடையே கொரோனா வேக்சின் ஏற்படுத்தும் சில அரிய பக்க விளைவுகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே கோவிஷீல்டு சில அரிய பக்க விளைவுகளை ஏற்படுத்துவதை அந்த நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கிடையே பாரத் பயோடெக்கின் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களிடையேயும் சில பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. SpringerLink என்ற இதழில் இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினருக்கு AESI எனப்படும் சில பாதகமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஆய்வு: பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சங்க சுப்ரா சக்ரபர்தி மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. கோவாக்சின் போட்டவர்களில் குறிப்பிட்ட மக்களுக்கு இந்த பாதிப்பு எளிதாக ஏற்படுகிறதாம். குறிப்பாகப் பருவ வயதில் இருக்கும் பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு இதன் பாதிப்பு அதிகம் இருக்கிறதாம்.
பக்க விளைவுகள்: 635 இளம் பருவத்தினர் மற்றும் 291 வயதானவர்கள் உட்பட 1,024 பேருக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டு அவர்களைப் பாலோ செய்து உடலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்துக் கொண்டுள்ளனர். அப்போது தான் வேக்சின் போட்டவர்களுக்கு வைரஸ் மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் பரவலாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதின்ம வயதில் இருப்போருக்குத் தோல் கோளாறுகள் (10.5%), இதர பாதிப்புகள் (10.2%) நரம்பு மண்டல கோளாறுகள் (4.7%) ஏற்பட்டுள்ளதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெரியவர்களிடையே பார்க்கும் போது பொதுவான பக்க விளைவுகள் (8.9%) தசைக்கூட்டு கோளாறுகள் (5.8%) மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் (5.5%) அடிக்கடி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது.
பெண்கள்: இதில் பெண்களிடையே தான் பாதிப்புகள் அதிகம் இருந்துள்ளது. குறிப்பாக மாதவிடாய் ஏற்படுவதில் 4.6% பேருக்கு மாற்றம் இருந்துள்ளது. வெகு சிலருக்கு (2.7%) கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஹைப்போ தைராய்டிசம் (0.6%) உள்ளிட்ட பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.
வெகு சிலருக்குப் பக்கவாதம் (0.3%) மற்றும் குய்லின்-பார் சிண்ட்ரோம் (0.1%) போன்ற தீவிர பாதிப்புகளும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இளம் பருவத்தினர், பெண்கள் மற்றும் ஏற்கனவே அலர்ஜி இருப்போருக்குத்தான் இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இணை நோய்ப் பாதிப்பு கொண்டவர்களிடையேயும் பாதிப்பு அதிகம் இருந்துள்ளது.
ஆய்வு சொல்வது என்ன: கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்கு நீண்ட கால கண்காணிப்பு தேவை என்பது அடிக்கோடிட்டு இந்த ஆய்வு முடிகிறது அதேநேரம் இவை மிகத் தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதா என்பது குறித்த தகவல்கள் இதில் இல்லை.
பொதுவாகவே வெகு சிலருக்கு மட்டுமே வேக்சின்கள் பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.. அதுவும் உயிரிழப்பு போன்றவை வேக்சினால் ஏற்படுவது மிக மிக அரிது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வேக்சின் போடவில்லை என்றால் தான் உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகமாகும். மேலும், வேக்சின் பக்கவிளைவுகள் என்பவை பொதுவாகத் தடுப்பூசி போட்டு சில வாரங்களில் ஏற்பட்டுவிடும். இத்தனை காலம் ஆகிவிட்டதால் இனி யாருக்கும் புதிதாகப் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதால் மக்கள் அஞ்சத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications