ஊழல் புகார்.. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் கைது! இரு துப்பாக்கிகளும் பறிமுதல்! டெல்லியில் பரபர
டெல்லி: தலைநகர் டெல்லியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குச் சமீபத்தில் தான் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடுகளில் ரெய்டு நடத்தி இருந்தனர்.
இதுபோன்ற ரெய்டுகள் இப்போதைக்கு அங்கு முடிவதாகத் தெரியவில்லை. இப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் ஊழல் புகார் ஒன்றில் செய்யப்பட்டு உள்ளார்.

ஊழல் புகார்
ஊழல் புகார் தொடர்பாக போலீசார் அவரிடம் முதலில் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பல இடங்களில் போலீசார் ரெய்டு நடத்திய நிலையில், மாலையில் டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவினர் அமானதுல்லா கானை கைது செய்தனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி வக்பு வாரியத்தில் சட்டவிரோதமாகச் சிலரை நியமனம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை
2020ஆம் ஆண்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அதன் பின்னர் நடத்தப்பட்ட ரெய்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தில்லி வக்பு வாரியத்தின் தலைவராக அமனத்துல்லா கான் இருந்த போது, விதிமுறைகளை 32 பேரைச் சட்டவிரோதமாக பணியமர்த்தினார்.

கைது
டெல்லி வக்பு வாரியத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி, இந்த சட்டவிரோத நியமனத்திற்கு ஆட்சேர்ப்புக்கு எதிராகத் தெளிவாக அறிக்கை அளித்துள்ளார். மாலை ரெய்டு நடந்த போது, அமானதுல்லா கானின் உறவினர்கள் அதிகாரிகளைத் தாக்கி உள்ளனர். டெல்லி வக்பு வாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற புகாரும் அவர் மீது உள்ளது.

துப்பாக்கி
அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் 24 லட்சம் ரொக்கமும், சட்டவிரோதமான இரு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது" என்று கூறப்பட்டு உள்ளது. டெல்லி வக்பு வாரியத்தில் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மறுப்பு
இருப்பினும், இந்தக்குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி முற்றிலுமாக மறுத்து உள்ளது. ஆம் ஆத்மி தனது ட்விட்டரில், "அமானதுல்லா கானின் கைது ஆதாரமற்றது. அவர் மீதான வழக்கு முற்றிலும் பொய்யானது. அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இது ஆம் ஆத்மி கட்சியை அவமானப்படுத்தவும் எம்எல்ஏவின் புகழைக் கெடுக்கவும் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சியாகும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
