லோக்சபா தேர்தலை விடுங்க! ராஜ்யசபாவில் 86ஆக குறைந்த பாஜகவின் பலம்! ஆனாலும் மசோதாவை நிறைவேற்ற முடியும்
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்து மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 86ஆக குறைந்திருக்கிறது.
கடந்த 2 லோக்சபா தேர்தலில் பாஜக தொடர்ந்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்தது. இந்த தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மை பெரும் என்றும், குறிப்பாக 400 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. அதாவது மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் எனில் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் பாஜக 240ல் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக ராமர் கோயில் அமைந்திருந்த அயோத்தி உள்ளிட்ட தொகுதிகளில் கூட பாஜக தோல்வியடைந்தது. இது அக்கட்சிக்குள் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. மறுபுறம், கூட்டணி கட்சி தயவில்தான் பாஜக ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது. பீகார் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களை வைத்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தது.
இப்படி இருக்கையில் தற்போது ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 86ஆக சரிந்திருக்கிறது. நியமன எம்பிக்களின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்ததால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது. தற்போது ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 86ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களின் எண்ணிக்கை 101ஆகவும் இருக்கிறது. மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 245. இதில் 19 இடம் தற்போது காலியாக இருக்கிறது.
எனவே ராஜ்யசபாவின் மொத்த பலம் 226ஆக குறைந்திருக்கிறது. ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்ற 114 எம்பிக்களின் ஆதரவு அவசியம். இருப்பினும் இப்போதும் கூட கட்சி சார்பற்ற நியமன எம்பிக்கள் 2 பேர், சுயேச்சைகள் 2 பேர், அதிமுக மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்களின் ஆதரவு மூலம் ராஜ்யசபாவில் பாஜகவால் மசோதாக்களை நிறைவேற்ற முடியும்.
மறுபுறம் காங்கிரஸை பொறுத்தவரை ராஜ்ய சபாவில் அதன் பலம் 26ஆக இருக்கிறது. மொத்தமாக இந்தியா கூட்டணி என எடுத்துக்கொண்டால் 87ஆக இருக்கிறது. இந்தியா கூட்டணி அணியில் இல்லாமல் எதிர்க்கட்சி வரிசையில் 29 எம்பிக்கள் இருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலை தவிர சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த இரண்டு கட்சிகளின் ஆதரவும் தற்போது வரை பாஜகவுக்கே இருக்கிறது. அதாவது ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி களமிறங்கியது. இந்த கூட்டணியில் பாஜகவும் இருந்தது. அப்படியெனில், ஜெகன்மோகன் ரெட்டி தோல்விக்கு பாஜகவும் காரணம். ஆனால், ராஜ்யசபாவில் ஜெகனின் கட்சி எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
மறுபுறும் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக்கின் வெற்றி சாம்ராஜ்ஜியத்தை பாஜக அடித்து நொறுக்கி ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனாலும், நவீனின் ராஜ்யசபா எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவாகதான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
