மீண்டும் நேரு குடும்பத்தின் வசம் தலைவர் பதவி! தலைமை போட்ட ரகசிய உத்தரவு? அதிர்ந்துபோன நிர்வாகிகள்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், டெல்லி தலைமையின் ரகசிய உத்தரவு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தோல்விகளையே சந்தித்து வருகிறது. காங்கிரஸ் தலைமை மீதான விமர்சனங்கள் கட்சிக்கு உள்ளேயே அதிகரித்து வருகிறது.
காங்கிரஸில் இருந்து சமீபத்தில் வெளியேறிய அனைத்து மூத்த தலைவர்களும் கூட இந்தக் காரணத்தைக் கூறி இருந்தனர். இதே நிலை காங்கிரஸில் தொடர்ந்தால், கட்சி காணாமல் போய்விடும் என்றும் சாடி இருந்தனர்.

தலைவர் தேர்தல்
ஒரு புறம் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ராகுல் காந்தி 150 நாட்களுக்கு மாபெரும் நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார். மறுபுறம் காங்கிரசுக்கு புதிய தலைமையைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது வரும் அக். 17ஆம் தேதி நடைபெறுகிறது. இது வெளிப்படையாகவும் நடுநிலையாகவும் நடைபெற வேண்டும் என சசி தரூர் உள்ளிட்ட காங். எம்பிக்களும் சமீபத்தில் தலைமைக்குக் கடிதம் எழுதி இருந்தனர்.

ரகசிய உத்தரவு
இந்தச் சூழலில் டெல்லி தலைமை அனைத்து மாநில தலைவர்களுக்கும் ரகசிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் மாநிலத் தலைவர்கள் மற்றும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்யத் தீர்மானங்களை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது உண்மை என்றால் தலைவர் தேர்தலே வெறும் கண் துடைப்பாக மாற வாய்ப்பு உள்ளது.

யார்
சோனியா காந்தி உடல்நிலை காரணமாகக் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை.. அதேபோல அவரது மகன் ராகுல் காந்திக்கும் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் இல்லை. பிரியங்கா காந்தியும் தலைவர் பதவிக்கு வர விருப்பமில்லை என்று கூறி உள்ள நிலையில், முதல் 20 ஆண்டுகளில் முதல்முறையாக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவருக்குத் தலைவர் பதவி செல்ல உள்ளது. தற்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை சோனியா காந்தி முன்னிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் முக்கியம்
இந்தச் சூழலில் தான் மாநிலத் தலைவர்கள் மற்றும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்யத் தீர்மானம் நிறைவேற்றக் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. கட்சி தேர்தலில் இவர்கள் தான் வாக்களிக்கப் போகிறார்கள். இந்த நேரத்தில் சோனியா காந்தி நியமிக்கும் நிர்வாகிகள், அவர்களுக்குச் சாதகமாகவே வாக்களிக்கவும் வாய்ப்புகள் அதிகம். செப். 22இல் தேர்தல் அறிவிப்பு வரும் நிலையில், செப். 20க்குள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

அடுத்து என்ன நடக்கலாம்
மேலும், அடுத்த காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்யவும் சோனியா காந்திக்கு அனுமதி அளிக்கும் வகையில் கூட மாநில காங்கிரஸ் கமிட்டிக்கள் தீர்மானங்கள் தாக்கல் செய்யவும் வாய்ப்பு உள்ளது. இது தேர்தலை நடைமுறையையே கேள்விக்குறியாக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இருப்பினும், இதுபோன்ற தீர்மானங்கள் தேர்தல் நடைமுறையைப் பாதிக்காது என்று தேர்தல் செயல்முறையுடன் தொடர்புடைய தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி
இன்னும் கூட கட்சி அளவில் ராகுல் காந்திக்கே செல்வாக்கு அதிகமாக உள்ளது. இப்போதும் மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படும் தலைவராக ராகுல் காந்தி தான் உள்ளார். 2024 தேர்தலுக்கு பாஜகவுக்கு எதிராகப் பொதுமக்களை ஒன்று திரட்ட ராகுல் காந்தி தொடங்கி உள்ள "பாரத் ஜோடோ" யாத்திரை தொடங்கி உள்ளார். இதனால் தங்கள் ஆதரவாளர்களில் ஒருவரை தான் தேர்தல் பதவிக்கு முன்னிறுத்த டெல்லி தலைமை விரும்பும்.

தேர்தல்
ராகுல் காந்தி கடந்த 2017இல் போட்டியின்றி காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் கடைசியாக 2000ஆம் ஆண்டில் தான் தலைமை பதவிக்குத் தேர்தல் நடந்தது. அதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜிதேந்திர பிரசாத் சோனியா காந்திக்கு எதிராகக் களமிறங்கினார். அதில் சோனியா காந்தி, 99 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications