அதிமுகவை விரட்டியது நீங்கதானே.. டெல்லி சந்திப்பில் அண்ணாமலையை விளாசினாரா நிர்மலா சீதாராமன்?
டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தது; தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது.

அண்ணாமலையால் அதிமுக கூட்டணி முறிவு: ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சி என்றும் பார்க்காமல் அதிமுகவின் தலைவர்களை சரமாரியாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அறிவித்தார் அண்ணாமலை. இதனாலேயே கடும் கோபமடைந்த அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது.
தமிழ்நாடும் நிர்மலா சீதாராமனும்: இந்த நிகழ்வுகள் நடந்த போது தமிழ்நாட்டில் முகாமிட்டிருந்தவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழ்நாடு பாஜக விவகாரங்களில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் அவ்வப்போது அடிபடுவது உண்டு. தமிழ்நாட்டில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன்/ தமிழ்நாடு பாஜக தலைவராக நிர்மலா சீதாராமன் என பலமுறை செய்திகள் வலம் வந்திருக்கின்றன.
நிர்மலா சீதாராமன் அறிக்கை: இப்பின்னணியில் அதிமுக- பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக பல்வேறு தரப்பிடம் கலந்து ஆலோசனை நடத்தி மிக விரிவான அறிக்கை ஒன்றை டெல்லி பாஜக தலைமையிடம் நிர்மலா சீதாராமன் கொடுத்திருந்தார். அந்த அறிக்கையில் பெரும்பாலும் அண்ணாமலையின் செயல்பாடுகள்தான் அதிமுகவின் கூட்டணி முறிவுக்கு காரணம் என திட்டவட்டமாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் அண்ணாமலை: இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை அண்ணாமலையை உடனே புறப்பட்டு வரச் சொன்னது. டெல்லி செல்லும் அண்ணாமலை வழக்கம் போல மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, பிஎல் சந்தோஷ் உள்ளிட்டோரைத்தான் சந்திப்போம் என காத்திருந்தார். ஆனால் திடீரென டெல்லி தலைமை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்குமாறு அண்ணாமலைக்கு உத்தரவிட்டது.
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு: இதனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமானை டெல்லியில் அண்ணாமலை இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணி முறிவுக்கு காரணமாக அண்ணாமலையின் பேச்சுகள் சுட்டிகாட்டப்பட்டதாம். இதற்கு அண்ணாமலை தந்த விளக்கங்களை வைத்து இன்னொரு அறிக்கையை டெல்லி மேலிடத்திடம் தர இருக்கிறதாம் நிர்மலா சீதாரமான் தரப்பு. பிடி இறுகுதோ?












Click it and Unblock the Notifications