தென்னிந்தியாவிலேயே பாஜகவின் மெயின் கூட்டணி கட்சியே அதிமுகதான்.. அதுவே.. தேஜஸ்வி யாதவ் 'நச்’ பாயிண்ட்
டெல்லி: பாஜக கூட்டணி கட்சிகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தியதன் விளைவுதான் அதிமுக கூட்டணியை முறித்து கொண்டுள்ளது என மூத்த காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தம் 38 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த 38 கட்சிகளில் அதிமுகதான் 2-வது பெரிய கட்சி.

தற்போது தமிழ்நாடு பாஜக தலைமையுடனான மோதல் முடிவுக்கு வராத சூழ்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்களை உள்ளடக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் தனி மெகா கூட்டணி அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த முனைந்தது பாஜக. ஆனால் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரதான கட்சிகளில் ஒன்றான அதிமுக விலகி இருக்கிறது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி கூறியதாவது: அதிமுக நல்ல முடிவையே எடுத்துள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை ஒருபோதும் மதித்தது இல்லை. சிவசேனா, அகாலி தள் கட்சிகளைத் தொடர்ந்து தற்போது அதிமுக. உத்தரப்பிரதேசத்திலும் பல கட்சிகள், பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டன. இவ்வாறு ரஷீத் ஆல்வி கூறினார்.

பீகார் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: இது பாஜக விவகாரம். இதில் அதிகம் கருத்து சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் திமுக மிகவும் வலிமையான கட்சி. திமுகவும் காங்கிரஸும் வலிமையான கூட்டணியாக திகழ்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என எந்த ஒரு அஜெண்டாவும் இல்லை. தென்னிந்தியாவிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரிய கட்சி அதிமுக. ஆனால் அதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. இது பாஜகவுக்கு மிகப் பெரிய இழப்பு. சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தள் என பிரதான கட்சிகள் ஏற்கனவே பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டன. தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது அர்த்தமற்ற் ஒன்றாகிவிட்டது. ஒரு சர்வாதிகாரி அமர்ந்து கொண்டிருக்கிறார். எஞ்சிய 2 பேர் இந்த நாட்டை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.












Click it and Unblock the Notifications