உ.பி தேர்தல்: பாஜகவை ரேஸில் மிரட்டும் அகிலேஷ் யாதவ்- ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்பு சொல்வது என்ன?
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 223 முதல் 235 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 145 முதல் 157 இடங்களைக் கைப்பற்றும் என்றும் ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

5 மாநில சட்டசபை தேர்தல்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்துடன் பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் பஞ்சாப் மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்றும் இதுவரையிலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஏபிபி-சிவோட்டர் சர்வே
தற்போது ஏபிபி-சிவோட்டர் புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இப்புதிய கருத்து கணிப்பின் விவரங்கள்: பாஜகவுக்கு 223-235 இடங்களும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 145-147 இடங்களும் கிடைக்குமாம். பாஜகவுக்கு 41.5% வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு 33.3% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாம். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக வாக்கு வங்கி சதவீதம் நிலையானதாகவும் சமாஜ்வாதி கட்சிக்கு சுமார் 10% அதிகமான வாக்குகளும் கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.

மாயாவதி, பிரியங்காவுக்கு பின்னடைவு
இத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாம். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஆனாலும் காங்கிரஸுக்கு அவரால் வாக்குகளை கொண்டு வந்து சேர்க்க முடியாது என்பதை இக்கருத்து கணிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த தேர்தலிலும் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் அதாவது வெறும் 7 இடங்கள் கிடைக்கக் கூடும் என்கிறது இந்த கணிப்பு. 2017 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 19, காங்கிரஸ் 7 இடங்களில் வென்றிருந்தது.

டஃப் பைட் தரும் அகிலேஷ்
உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல், மேற்கு உ.பி., ஆவாத் பிராந்தியங்களில் பாஜகவுக்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கடும் போட்டியை தரக் கூடும் என்கிறது ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு. புந்தல்காண்ட் பிராந்தியத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசும் என்கிறது கருத்து கணிப்பு.












Click it and Unblock the Notifications