உயிரிழந்த பிறகும் கணவர் கடமை முடிவுக்கு வராது.. மனைவிக்கு மாமனார் ஜீவனாம்சம் தரணும்! ஐகோர்ட் உத்தரவு
அலகாபாத்: பராமரிப்பு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான சில கருத்துகளைக் கூறியுள்ளது. அதாவது மனைவியைப் பராமரிக்கும் பொறுப்பானது கணவர் மறைந்த பிறகு முடிவுக்கு வந்துவிடாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்து திருமண சட்டத்தின் கீழ் மாமனார் பராமரிப்பு தொகையைத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டது.
விவகாரத்துத் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரும்போது பல முக்கியமான கவனிக்கத்தக்க உத்தரவுகள் மற்றும் கருத்துகளை நீதிமன்றங்கள் அளிக்கும். இப்படி எல்லாம் கூட சட்டத்தில் இடமிருக்கா என நமக்குத் தெரியாத பல கருத்துகளை நீதிமன்றம் தெரிவிக்கும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

பராமரிப்பு தொகை
இதற்கிடையே விவாகரத்து பராமரிப்பு தொகை தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது கணவர் மறைந்த பிறகும் மனைவி, தனது மாமனாரிடமிருந்து பராமரிப்புத் தொகையைப் பெற உரிமை உண்டு என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் அரவிந்தம் சின்ஹா, சத்ய வீர் சிங் அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.
அதாவது தனது கணவர் இறந்துவிட்டதால் மாமனாரிடம் இருந்து தனக்குப் பராமரிப்பு தொகையைப் பெற்றுத் தர வேண்டும் எனப் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்து திருமண சட்டத்தின் கீழ் மாமனார் தொகையைத் தர வேண்டும் என கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து மாமனார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இறந்த பிறகும் கடமை முடிந்துவிடாது
இது தொடர்பான வழக்கில் தான் பெண் தனது மாமனாரிடமிருந்து பராமரிப்புத் தொகையைப் பெற உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தபோது நீதிமன்றம் இக்கருத்துக்களைத் தெரிவித்தது. மனைவியைப் பராமரிக்கும் பொறுப்பானது கணவர் மறைந்த பிறகு முடிவுக்கு வந்துவிடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாமனாரிடம் இருந்து பராமரிப்பு தொகை
அந்த நீதிமன்ற உத்தரவில், "தனது மனைவியைப் பராமரிக்கக் கணவன் கடமைப்பட்டவர். கணவன் மனைவி பிரிந்து வாழும் சூழல் அல்லது இந்து சட்டத்தின் கீழோ பராமரிப்புக் கோரப்படும்போது இத்தகைய கட்டுப்பாடு பொதுவாகப் பொருந்தும். இந்த கடமை கணவர் இறந்த பிறகும் தொடர்கிறது.. எனவே விதவையான மனைவி மாமனாரிடமிருந்து பராமரிப்பு தொகையைக் கோரலாம்" என்றனர். பராமரிப்பு தொகை விவகாரத்தில் நீதிமன்றத்தின் இந்த கருத்துகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சட்டம் சொல்வது என்ன!
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டப்படி, விதவையான மருமகள் தனது சொந்த வருமானம் அல்லது சொத்துக்களால் தன்னை பராமரித்துக் கொள்ள முடியாதபோது மாமனாரிடமிருந்து பராமரிப்பு தொகையைப் பெற முடியும். அதேநேரம் கணவர், பெற்றோர் அல்லது குழந்தைகளிடம் இருந்து எந்தவொரு பராமரிப்பையும் பெற முடியாத போது மட்டுமே மாமனாரிடம் கோர முடியும். சட்டத்தின் பிரிவு 21 (viii) தான் இதுபோல விதவையாகும் பெண், அவர் மறுமணம் செய்யாதவரை, மாமனாரின் சொத்துக்களிலிருந்து பராமரிப்புக் கோர வழிவகை செய்கிறது.
அதேநேரம் மாமனார் தனது சொத்து அல்லது பரம்பரை சொத்துக்களில் இருந்து மருமகளுக்குப் பராமரிப்புத் தொகை செலுத்த போதுமான வழிகள் இல்லாதபோது பராமரிப்பு தொகையைச் செலுத்தத் தேவையில்லை. அதுவரை இதுபோல அரிதான கேஸ்களில் மாமனாரிடம் இருந்து மருமகள்கள் பராமரிப்பு தொகையைக் கோர முடியும். அதேநேரம் அந்தப் பெண் மீண்டும் திருமணம் செய்துகொண்டால், பராமரிப்பு செலுத்தும் கடமை முழுமையாக முடிவுக்கு வரும்.












Click it and Unblock the Notifications