இந்தியா வரும் புதின்.. டிரம்ப் மிரட்டலுக்கு நடுவே மோடியுடன் சந்திப்பு.. எப்போது? பெரிய பிளான்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். அதோடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று மிரட்டி வருகிறார். இந்த மிரட்டலுக்கு நடுவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நம் நாட்டுக்கு வருகை தர உள்ளார். வரும் டிசம்பர் மாதம் புதின் நம் நாட்டுக்கு வந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு அடாவடியாக வரி விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறைக்கு 25 சதவீதம், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை போட்டுள்ளார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா நம் நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

ஆனால் பிரதமர் மோடி அதனை கண்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நம் நாடு வாங்கி வருகிறது. நம் நாட்டின் தேவையில் 36 முதல் 38 சதவீத கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்கப்படுகிறது. இதனால் கோபமான டிரம்ப் உக்ரைன் மீதான போரை தொடர ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா உதவுதாக கூறி வரியை போட்டுள்ளார்.
இதனால் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா - இந்தியா இடையே கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நம் நாட்டுக்கு வருகை தர உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை தர உள்ளார். ரஷ்யாவும், இந்தியாவும், நீண்டகாலமாக நட்பு நாடுகளாக உள்ளன. இந்தியா - ரஷ்யா இடையேயான உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார்.
உக்ரைன் போரை காரணமாக காட்டி அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதேபோல் ரஷ்யாவிடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி நம் நாட்டுக்கு டிரம்ப் வரி விதித்துள்ளார். இதனால் புதின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வேளையில் இந்தியா - ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்பதால் புதினின் இந்தியா வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி இன்று ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சீனா சென்றார். சீனாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications