டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே வெடித்த வெடிகுண்டு? ஸ்பாட்டில் கிடைத்த பரபர கடிதம்.. ஷாக் பின்னணி
டெல்லி: பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் பின்புறம் வெடிகுண்டு வெடித்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த இடத்தில் இஸ்ரேல் கொடியில் வைத்து வீசப்பட்டு இருந்த பரபரப்பான கடிதம் கிடைத்தது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் திடீரென்று இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் இஸ்ரேலுக்கும் நுழைந்து 200க்கும் அதிகமானவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணையக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கி விட்டதாக கூறி காசா மீது வான்வெளி, தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளார்.
2 மாதங்களை கடந்தும் இந்த போர் நீடித்து வருகிறது. தற்போது வரை 2 தரப்பையும் சேர்ந்து 15 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் ஈரான் உள்பட பல இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் போரை நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
மேலும் இஸ்ரேல் கப்பலை செங்கடல் பகுதியில் ஹவுதிகள் சிறைபிடித்து தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது ஒருபுறம் இருக்க டெல்லி சானக்கியாபுரி பகுதியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தின் பின்புறத்தில் காலியாக உள்ள வீட்டு மனையில் வெடிகுண்டு வெடித்ததாக இன்று மாலை 5 மணிக்கு டெல்லி தீயணைப்பு மர்மநபர் ஒருவர் போன் செய்துவிட்டு இணைப்பை துண்டித்தார்.
போர் நடவடிக்கைக்கு நடுவே இந்த போன்கால் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வெடிகுண்டு உள்ளிட்ட வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும் வெடிச்சத்தத்தை கேட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது வெடிச்சத்தம் கேட்ட இடத்தின் அருகே இஸ்ரேல் கொடியில் கடிதம் ஒன்று சுற்றப்பட்டு கிடந்தது. அந்த கடிதத்தை எடுத்து போலீஸ் பார்த்தனர். அப்போது அதில் இருந்த விஷயங்கள் அதிர்ச்சியை கொடுத்தன. ஒரு பக்கத்தில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த கடிதத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
அதாவது காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருவதை நிறுத்த வேண்டும். இதற்காக இஸ்ரேலை பழிவாங்கும் நோக்கத்தில் இது செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அதில் இருந்த மீதமுள்ள விஷயங்களை போலீசார் சொல்ல மறுத்துவிட்டனர். மேலும் அந்த கடிதத்தை போலீசார் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கடித்ததை தட்டச்சு செய்தது யார்? அவரது பின்னணி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதனால் போன் வந்த எண்ணை வைத்து போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு தொடர்பான போன் கால் மற்றும் காசா மீதான போர் நடவடிக்கை உள்ளிட்டவற்றால் தற்போது இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications