திடீரென மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. களத்தில் இறங்கிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா-முக்கிய ஆக்ஷன்
டெல்லி: கொரோனா பரவல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பல மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று மொத்தம் 1.59 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 5,90,611ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 327 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாசிட்டிவ் விகிதமும் மீண்டும் அச்சமூட்டும் வகையில் 10.21%ஆக உயர்ந்துள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்படும் நபர்களில் 10இல் ஒருவருக்கு கொரோனா உறுதியாகிறது.

இந்த 2 மாநிலங்கள்
மகாராஷ்டிராவில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. அங்குத் தினசரி கொரோனா பாதிப்பு 41,434ஆக உள்ளது. அதில் கிட்டதட்ட பாதி அதாவது 20,318 மும்பையில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல டெல்லியிலும் ஒரே நாளில் 20,181 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது அச்சப்படத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால், மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் ஊரடங்கு அமல்படுத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி முக்கிய சுகாதார துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா பரவல் நிலைமை குறித்தும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், மருத்துவ உட்கட்டமைப்பு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் சுகாதார அதிகாரிகளுக்கா பிரதமர் மோடி அறிவுறுத்தினார்,

மன்சுக் மாண்டவியா
இந்தச் சூழலில், கொரோனா பரவல் நிலை குறித்து அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (ஜன. 10) ஆலோசனை நடத்துகிறார். இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கொரோனா பரவல் நிலை குறித்தும் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலேயே நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், இது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications