வக்பு சட்ட திருத்தம்! “வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களிடையே அச்சத்தை உண்டாக்காதீர்கள்”- அமித்ஷா
டெல்லி: வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். வக்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, "இந்த சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் உரிமைகளையும், அதிகாரத்தையும் குறைப்பதாக எதிர்க்கட்சிகள் ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருகின்றன. இதன் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி தங்களுக்கான வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்கான தந்திரம்தான் இது.

இச்சட்டம் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையில் தலையிடுகிறது என்று சொல்வதும், அவர்கள் நன்கொடையாக வழங்கும் சொத்துக்களில் தலையிடும் என்பதும் முற்றிலும் தவறானதாகும்.
வக்பு அறக்கட்டளை இஸ்லாமிய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அது செயல்படும் விதம் நிர்வாகப் பணிகளைப் பற்றியது, மதத்தைப் பற்றியது அல்ல. இஸ்லாமியர் அல்லாதவர்கள் யாரும் வக்புக்குள் வரமாட்டார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். மத நிறுவனங்களை நிர்வகிப்பவர்களில் இஸ்லாமியர் அல்லாதவர்களை சேர்க்க எந்த ஏற்பாடும் இல்லை. நாங்கள் இதை செய்ய விரும்பவில்லை.
நன்கொடையாக அளிக்கப்பட்ட சொத்தின் நிர்வாகத்தை மட்டுமே இஸ்லாமியர் அல்லாதவர்கள் கவனிப்பார்கள். அவர்கள் எந்த மத நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள். சொத்து எந்த நோக்கத்திற்காக நன்கொடையாக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா? என்பதை மட்டும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் பார்ப்பார்கள்" என்று கூறியிருக்கிறார்.
வக்பு சட்டம் என்றால் என்ன?
1955ம் ஆண்டு வக்பு சட்டத்தில் மத்திய அரசு தற்போது திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. வக்ஃப் என்றால் இறைபணிக்கு கொடுக்கப்படும் நன்கொடை. இந்த நன்கொடை 2 வகைகளாக கொடுக்கப்படுகிறது. ஒன்று அல்லாவின் திருப்பெயரில் கொடுக்கப்படுகிறது. இதனை திரும்ப கேட்கவோ, உரிமை கோரவோ முடியாது.
இரண்டாவது உள்ள நன்கொடையில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. இதனை Waqf Alal Aulad என்று கூறுவார்கள். தன்னுடைய சொத்தை ஒருவர் வக்பு சொத்தாக அறிவிக்கலாம். அவரின் வாரிசுகளுக்கு இந்த சொத்தை நிர்வகிக்கும் உரிமை இருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் திருத்தம் முதல் வகை நன்கொடைக்கானது அல்ல. இரண்டாவது வகைக்கானது. இரண்டாவது வகை நன்கொடை இனி அரசு பொறுப்பில் வரும் என்றும், இதனை யாரும் நிர்வகிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சிகள் அச்சம் எழுப்பியுள்ளனர். இதனால் சொத்தின் மீதான உரிமை பறிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், அரசு தரப்போ, நன்கொடைகள் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு கைம்பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகளின் உதவிக்காக பயன்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications