"குஜராத்திகள்.." அமித் ஷாவின் திட்டம்.. முதலில் பேச்சு அடுத்து முழுக்க ஆக்ஷன் தான்
டெல்லி: மத்திய அமைச்சர் அமித் ஷா இரு நாட்கள் பயணமாகக் குஜராத் வரும் நிலையில், அங்கே அவர் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா நாளை குஜராத் செல்லவுள்ளார். அகமதாபாத் மற்றும் காந்திநகருக்குத் தனது இரண்டு நாள் பயணத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணிக்கிறார்.

காந்திநகர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். ஷாப்பிங் சென்டரில் பார்க்கிங் வசதி, எட்டு பூங்காக்களைப் புதுப்பித்தல் உள்ளிட்டவை திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
அதேபோல அகமதாபாத்தில், அவர் நாரன்புராவில் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம், கோட்டாவில் தீயணைப்பு நிலையம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு போன்றவற்றைத் திறந்துவைக்கிறார். அதைத் தொடர்ந்து தேவபூமி துவாரகாவில் உள்ள துவாரகாவையும் அவர் பார்வையிடுவார். மேலும், அவரது மக்களவை தொகுதியான காந்தி நகர் தொகுதியிலும் அவர் பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக, ஸ்ரீ டெல்லி குஜராத்தி சமாஜின் 125 ஆண்டு நிறைவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து அமைச்சர் அமித் ஷா, குஜராத்திகளின் பங்களிப்பு குறித்து பெருமையாகப் பேசினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமித் ஷா: அந்த நிகழ்ச்சியில் குஜராத்தியில் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா,"மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி ஆகிய நான்கு குஜராத்திகளும் இந்தியாவின் நவீன வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
காந்தியடிகளின் முயற்சியால் நாடு சுதந்திரம் பெற்றது, சர்தார் படேல் காரணமாக நாடு ஒன்றுபட்டது, மொரார்ஜி தேசாய் காரணமாக நாட்டின் ஜனநாயகம் புத்துயிர் பெற்றது.. நரேந்திர மோடியால் இந்தியா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு குஜராத்திகளும் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளனர், அவர்கள் ஒட்டுமொத்த தேசத்தின் பெருமை.
நரேந்திர மோடி: பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில் நாடு பல சாதனைகளைப் படைத்துள்ளது. 2014-ம் ஆண்டு மோடி பிரதமரானபோது, இந்தியாவின் பொருளாதாரம் உலகில் 11-வது இடத்தில் இருந்தது. இன்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் உலகில் 5-வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகக் கூறுகின்றனர்.

மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தியுள்ளோம். இந்தியாவின் எல்லையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்ற மெசேஞ்சை இந்தியா உலகிற்கு வழங்கியது.. 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற பரந்த நாட்டில், கொரோனா வேக்சின் பணிகள் சுமுகமான முறையில் நிறைவடைந்தது.
பிரதமர் மோடியின் தலைமையில், உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளராக இந்தியா மாறியுள்ளது, ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா மூன்றாவது இடத்திலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நான்காவது இடத்திலும் உள்ளது. இப்படி பிரதமர் மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்" என்றார்.
முதல் நாளான இன்று குஜராத்தி மக்களின் பங்களிப்பை புகழ்ந்து பேசியுள்ள அமித் ஷா, நாளை நேரடியாகக் குஜராத்திற்கே சென்று பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்,












Click it and Unblock the Notifications