கேந்திரிய வித்யாலயா முதல் ஐஐடி வரை இந்தி மொழி கட்டாயம்.. சர்ச்சையை கிளப்பும் அமித்ஷா குழு பரிந்துரை
டெல்லி: கேந்திரிய வித்யாலயா முதல் ஐஐடி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது புதிய சர்ச்சையாகி உள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இந்தியா இருக்க வேண்டும் என்றும் அமித்ஷா குழு பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவானது 1976-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் லோக்சபா எம்.பி.க்கள் 20 பேர்; ராஜ்யசபா எம்.பிக்கள் 10 பேர் 30 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து இந்த அலுவல் மொழி குழு அறிக்கை வழங்கும். தற்போது இந்த குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைவராக உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு தமது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கியது. அமித்ஷா குழுவானது இந்தி மொழி தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திதான் பயிற்று மொழி
அப்பரிந்துரைகளில், அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும்; ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலத்துக்கு பதில் இந்தி
ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா விதியாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயீற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிறது அமித்ஷா குழுவின் பரிந்துரை.

வேலைவாய்ப்பிலும் இந்தி
அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிறது இக்குழு பரிந்துரை. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டுமாம்.

நீதித்துறையில் இந்தி
இந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் இந்தி இடம்பெற வேண்டும்; அரசியல் சாசன தேவை ஏற்பட்ட்டால் மட்டுமே ஆங்கில மொழி பெயர்ப்பை பயன்படுத்த வேண்டும்; விளம்பரங்கள் அனைத்தும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும்; ஆங்கில விளம்பரங்கள் சிறியதாகத்தான் இருக்க வேண்டும் எனவும் அமித்ஷா குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்திலும், அமைச்சரவை இலாகாக்கள் அனைத்திலும் கடிதங்கள், பேக்ஸ்கள், இ மெயில்கள் இந்தியில்தான் இருக்க வேண்டும்; அலுவலக பயன்பாட்டுக்கு எளிதான இந்தி பயன்படுத்த வேண்டும். மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது அமித்ஷா குழு.












Click it and Unblock the Notifications