"மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது!" அமித் ஷா திட்டவட்டம்! தொகுதி மறுவரையறையில் பரபர வாதம்
டெல்லி: மத்திய அரசு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் உள் துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மூன்று மிக முக்கியமான மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.. தொகுதி மறுசீரமைப்பு முதல் யூனியன் பிரதேச சட்டங்கள் வரை 3 மசோதாக்கள் இதில் உள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

3 மசோதாக்கள்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இணைந்து இன்று மூன்று மசோதாக்களை லோக்சபாவில் தாக்கல் செய்தனர்:
131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, 2026: இந்திய நாடாளுமன்றத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பெண்களுக்கு அதிகாரத்தில் சம பங்கு அளிப்பதற்கான ஒரு சட்டப்பூர்வ நுழைவுவாயில் தான் இந்த சட்டத்திருத்த மசோதா.
தொகுதி மறுசீரமைப்பு மசோதா (Delimitation Bill), 2026: PoK உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதிநிதித்துவ கணக்குகள் தொடர்பானது.
யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026: இதை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாகத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ்
மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதே, காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் எழுந்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஆனால், உடனே குறுக்கிட்ட அமித் ஷா, நாடாளுமன்ற விதிகளின்படி எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது அமித் ஷா, "ஒரு மசோதாவை அறிமுகம் செய்யும் கட்டத்தில், அதன் தகுதிகள் (Merits) குறித்து விவாதிக்க முடியாது. தொழில்நுட்ப ரீதியான (Technical) ஆட்சேபனைகளை மட்டுமே எழுப்ப முடியும். விவாதத்தின் போது உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் அரசு தரப்பில் வலுவான பதிலடி கொடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அமித் ஷா இடையே நேரடி மோதல் வெடித்தது. சபாநாயகர் ஓம் பிர்லா தலையிடும் அளவுக்கு நிலைமை சென்றது.
அகிலேஷ் vs அமித் ஷா
முதலில் பேசிய அகிலேஷ் யாதவ்: "மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு ஏன் இவ்வளவு அவசரம்? முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துங்கள். அது முடிந்ததும் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு கேட்போம். எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்!" எனச் சாடினார். இதற்குப் பதிலளித்த அமித் ஷா, "கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 2027க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாகவே நடத்தப்படும். விட்டால் சமாஜ்வாதி கட்சி வீடுகளுக்குக் கூட சாதி அடையாளம் கொடுத்துவிடும் போலிருக்கிறது" என்றார்.
அப்போது உள் ஒதுக்கீடு தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எழுப்பிய கேள்விக்கு, அமித் ஷா தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகப் பதிவு செய்தார். இது தொடர்பாக அவர், "மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எந்த வகையிலும் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. நமது அரசியலமைப்பு அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத ரீதியான ஒதுக்கீடு
அப்போது அகிலேஷ் யாதவ், "முஸ்லிம் மக்கள் தொகை அந்த 50% வரம்பிற்குள் வராதா? முஸ்லிம் பெண்கள் இந்த நாட்டின் மக்கள் தொகையில் இல்லையா? ஓட்டு வாங்கும்போது மட்டும் பிரதமர் தான் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று சொல்கிறாரே?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதற்கு அமித் ஷா, "வேண்டுமானால் சமாஜ்வாதி கட்சி தனது அனைத்து சீட்டுகளையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுக்கட்டும், நாங்கள் அதை எதிர்க்கப்போவதில்லை!" என்றார்.
மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்கவே தொகுதி மறுசீரமைப்பு செய்கிறோம் என்பது மத்திய அரசின் வாதமாக இருக்கிறது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும்போது சிறுபான்மை சமூக பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்பதே எதிர்க்கட்சிகள் வாதமாக இருக்கிறது. ஆனாலும், அதற்கு வாய்ப்பில்லை என்பதையே அமித் ஷா தனது பதில் மூலம் உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications