ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? மவுனம் கலைத்த அமித்ஷா.. கொடுத்த பதில் இதுதான்
டெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென ராஜினாமா செய்த நிலையில் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை எனவும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? எனவும் எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றன. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமித்ஷா விளக்கம் அளித்து பேசினார்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது உடல் நலனை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து இருந்தார். இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த தேர்தலானது நடைபெற உள்ளது.

ஜெகதீப் தன்கர் ராஜினாமா
ராஜினாமா செய்துள்ள ஜெகதீப் தன்கர் தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை எனவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? எனவும் எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றன. எனினும் ராஜினாமா செய்த பிறகு ஜெகதீப் தன்கர் பற்றிய எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷாவிடம் செய்தியாளர்கள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேட்டனர்.
அமித்ஷா பதில்
இதற்கு பதிலளித்த அமித்ஷா, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை முற்றிலும் நிராகரித்துவிட்டார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமித்ஷா மேலும் கூறியதாவது:- தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் தெளிவாக தனது உடல் நலனே பதவியில் இருந்து விலக காரணம் என்று கூறியுளார். மேலும் பிரதமர் மோடி மற்றும், பிற அமைச்சர்களுக்கு தனது உளப்பூர்வமான நன்றியையும் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்" என்றார்.
ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து அமித்ஷாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமித்ஷா கூறியதாவது:- "உண்மை மற்றும் பொய்களின் விளக்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை சார்ந்திருக்க கூடாது. இந்த விஷயங்களை பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை. ஜெகதீப் தன்கர் அரசியலமைப்பு பதவியை வகித்து அரசியலைப்பு கடமைகளை செய்தார்.
காங்கிரஸ் தொடர் கேள்வி
உடல் நலக் காரணங்களுக்காக தான் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்து உள்ளார். இந்த விவகாரத்தில் அதிகமாக சிந்திக்க கூடாது" என்று தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததும், தற்போது அவரைப் பற்றிய தகவல் எதுவும் வெளிவராத நிலையில், காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இது பற்றி கூறுகையில், "துனை ஜனாதிபதி ராஜினமா விவகாரத்தில் இப்படி ஒரு மவுனம் நீடிப்பது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்" என்று கூறியிருந்தார். அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "ஜெகதீப் தன்கர் எங்கு இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், நாட்டை இடைக்கால கால கட்டத்திற்கு பாஜக இழுத்து செல்கிறது" என்றும் விமர்சித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications