நாட்டில் இந்தி மொழியை ஊக்குவித்தால் தாய் மொழியும் சேர்ந்து வளருமாம்.. சொல்வது அமித்ஷா!
டெல்லி: இந்தி மொழி ஊக்குவிக்கப்படும் போது, மற்ற இந்திய மொழிகளும் வலுவடையும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசி இருக்கிறார். மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதாக தவறான பிரச்சாரம் நடந்து வருவதாக கூறிய அமித்ஷா, இந்தி மற்றும் தாய் மொழிகளுக்கு இடையில் எந்த சர்ச்சையும் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பராசக்தி படம் வெளியான போது, தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்த விவாதம் நடைபெற்றது. மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு, தாய் மொழி அழியும் அபாயம் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமித்ஷா மீண்டும் இந்தி திணிப்பு தொடர்பாக பேசியுள்ள கருத்து விவாதமாகி இருக்கிறது.

நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், இந்தி மொழி ஊக்குவிக்கப்படும் போது, பிற இந்திய மொழிகளும் வலுப்பெறும். இந்தி மொழி வளர்ச்சி என்பது தாய் மொழிகளைப் பலவீனப்படுத்துவது இல்லை. சாமானிய மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதாக ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக அந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. ஏனென்றால் இந்திக்கும், தாய் மொழிக்கும் இடையில் எந்த சர்ச்சையும் கிடையாது. ஏனென்றால் இந்தி மொழியும், பிற மாநில மொழிகளும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகள். அந்த இரு மொழிகளும் ஒருவரின் கையை பிடித்து ஒருவர் முன்னேறி இருக்கின்றன.
இந்தி மொழியானது தாய் மொழிக்கு மாற்றாக கொண்டு வரப்படும் என்று சொல்லவில்லை. ஆங்கிலத்திற்கு மட்டுமே மாற்றாக இருக்க வேண்டும். அலுவல் மொழியை எந்த எதிர்ப்புமின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வது தேசிய ஒற்றுமைக்கு மிகவும் அவசியம். இந்தி மொழியுடன் அனைத்து பிராந்திய மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
அதேபோல் அலுவல் பணிகளில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள புத்தகங்களை இந்திக்கு மொழிப் பெயர்ப்பதற்கும், இந்தியில் இருந்து பிற மொழிகளுக்கு மொழிப் பெயர்ப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications