"அன்புமணி செய்தது எல்லாமே முறைகேடுதான்.. இப்போது ராமதாஸ் தான் பாமகவின் தலைவர்!" ஜிகே மணி திட்டவட்டம்
டெல்லி: அன்புமணி பதவிக்காலம் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ள பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, ராமதாஸ் தான் இப்போது பாமக தலைவராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணி தரப்பினர் முகவரி மாற்றுவதில் மோசடி செய்துள்ளதாகச் சாடிய அவர், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதிகாரம் ராமதாஸுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாமகவில் உட்கட்சி விவகாரம் இப்போது பெரிதாக வெடித்துள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இரு தரப்பும் வெளிப்படையாகவே மோதிக் கொள்கிறார்கள். இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்துக் கொள்கிறார்கள். குறிப்பாக பாமக தலைவர் பதவி விவகாரத்தில், அன்புமணி பதவிக்காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தரப்பு சொல்கிறது.

ஜிகே மணி
இருப்பினும், அதைத் திட்டவட்டமாக மறுக்கும் ராமதாஸ் தரப்பு, அன்புமணி பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும் ராமதாஸ் தான் இப்போது தலைவர் என்றும் சொல்லி வருகிறது. இந்தச் சூழலில் ராமதாஸ் ஆதரவாளரும் பாமக கவுரவத் தலைவருமான ஜிகே மணி இன்று தேர்தல் ஆணையரைச் சந்தித்தார். அதன் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜிகே மணி சில முக்கிய கருத்துகளைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து பாமக சார்பில் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளோம். பாமகவை தொடங்கிய ராமதாஸ் சார்பில் சில முக்கிய தகவல்களைச் சமர்ப்பித்துள்ளோம். தமிழ்நாட்டில் ராமதாஸ் உருவாக்கிய பாமக இப்போது தவிர்க்க முடியாத கட்சியாக உருவெடுத்துள்ளது. இப்போது சில நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.
ராமதாஸ் தான் தலைவர்
பாமக நிறுவனரான ராமதாஸ் இப்போது கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். அன்புமணி 2022ம் ஆண்டு மே 28ம் தேதி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான். எனவே, 2025 மே மாதத்தோடு அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால், ஓராண்டு பதவி நீடிப்பு பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது தவறானது.
அன்புமணி பதவிக்காலம் முடிந்த பிறகு பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பாமக விதிகளின்படி எல்லா நிகழ்வுகளும் நிறுவனர் ஆலோசனை பெற்றே செய்ய வேண்டும். ஆனால், அன்புமணி தரப்பு அதைச் செய்யவில்லை. மேலும், பாமக அலுவலக முகவரியையும் மாற்றியுள்ளனர். யாருக்கும் தெரியாமல் அன்புமணி தரப்பு முகவரியை மாற்றியுள்ளனர்.
முறைகேடு
பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில், 9வது தீர்மானமாக முகவரி மாற்றப்பட்டதாகச் சொல்லி அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்திற்குப் பொய்யான தகவலைக் கூறியுள்ளனர். அது மிகப் பெரிய முறைகேடு. ஓராண்டு பதவி நீடிப்பு, முகவரி மாற்றப்பட்டது என இரண்டுமே முறைகேடு. அவருக்குத் தலைவர் பதவி நீடிக்கப்பட்டது செல்லாது. தேர்தல் ஆணையத்திடம் முன்பே மனு கொடுத்தோம். சில கூடுதல் தகவல்களைக் கேட்டிருந்தனர். அதைக் கொடுக்கவே இன்று தேர்தல் ஆணையரைச் சந்தித்தோம்.
பாமக தலைவர் பதவி அன்புமணிக்கு ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டதாக அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் இதை ஏற்று கொள்ளவில்லை. நாங்களும் பதவிக்காலம் முடிந்துவிட்டது. பதவி நீடிப்பு இல்லை என்று நாங்கள் விளக்கம் கொடுத்தோம். அதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல உத்தரவைத் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
ஆவணங்கள் பொய்யானது
அன்புமணி ஆவணங்கள் பொய்யானது என்று சொல்ல வருகிறீர்களா என்ற கேள்விக்கு அவர், "தாராளமாக அப்படி எடுத்துக் கொள்ளலாம். உண்மையான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்துவிட்டோம். தேர்தல் ஆணையம் உண்மையை ஏற்றுக் கொள்ளும். நாங்கள் ஆதாரத்தோடு எங்கள் தரப்பு விளக்கங்களைக் கொடுத்துள்ளோம். அதைத் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்க முடியாது. ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
சட்டசபைத் தேர்தல் விவகாரத்தில் கூட்டணி பேசும் அதிகாரம் ராமதாஸுக்கு கொடுத்துள்ளோம். பாமக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை அவர் தான் நடத்துவார். அதுவே வெற்றிக் கூட்டணியாக அமையும்" என்றார்.












Click it and Unblock the Notifications