"அதிக முதலீடுகள்!" ஆதிக்கம் செலுத்தும் தென் மாநிலங்கள்! ஆந்திரா முதலிடம்! டாப் 5ல் கூட தமிழகம் இல்லை
டெல்லி: இந்தியாவில் இப்போது பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநிலங்களுக்குத் தேவையான முதலீடுகளைப் பெறப் பல தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே நாட்டில் மாநிலம் வாரியாக எந்த மாநிலங்கள் எவ்வளவு முதலீடுகளைப் பெற்றுள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளன. அதில் தென் மாநிலங்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆந்திராவுக்கு அதிக முதலீடுகள் போய் உள்ளன. தமிழ்நாடு இந்த லிஸ்டில் எங்கே உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் முதலீடுகளை ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சலுகைகள், வரி விலக்கு என ஒவ்வொரு மாநிலமும் முதலீடுகளைப் பெற ஏகப்பட்ட முயற்சிகளைப் பெற்று வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எவ்வளவு முதலீடுகளைப் பெற்றுள்ளன என்பது குறித்த ரிப்போர்ட்டை பாங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்
அதில் இந்தியாவிலேயே ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் முதன்மை முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளது. 2025-2026 நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் வேறு எந்த மாநிலத்தையும் விட அதிகபட்ச முதலீட்டை ஆந்திர பிரதேசம் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு வந்த முதலீடுகளில் 25.3% ஆந்திராவுக்குச் சென்றுள்ளது. அதாவது இந்தியாவுக்கு வந்த ஒவ்வொரு ஒரு ரூபாய் முதலீட்டிலும் சுமார் 25 பைசா ஆந்திராவுக்கு மட்டும் சென்றுள்ளது.
ஆந்திராவுக்கு அடுத்தபடியாக ஒடிசாவிலும் அதிக முதலீடுகள் குவிந்துள்ளன. ஒட்டுமொத்த முதலீட்டிலும் சுமார் 13.1% ஒடிசாவுக்குச் சென்றுள்ளது. ஒடிசாவைத் தொடர்ந்து சுமார் 12.8% மகாராஷ்டிராவுக்குச் சென்றுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக நாட்டிற்கு வந்த முதலீடுகளில் சுமார் 50%க்கு மேல் இந்த மூன்று மாநிலங்களுக்கு மட்டும் சென்றுள்ளது.
டாப் 5 மாநிலங்கள்
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு மொத்தம் ₹26.6 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. அதாவது கடந்தாண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் 11.5% அதிகமாகும். இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிவதாகவும் இந்த ரிப்போர்ட் அதையே உறுதி செய்வதாகவும் பாங்க் ஆஃப் பரோடா தனது ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
டாப் 3 இடங்களில் ஆந்திரா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா இருக்கும் நிலையில், 4வது இடத்தில் சுமார் 9.5% முதலீடுகளுடன் உடன் தெலுங்கானா இருக்கிறது. அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் 7.1% முதலீடு உடன் 5வது இடத்தில் இருக்கிறது. இந்த டாப் 5 மாநிலங்களுக்கு மட்டும் நாட்டிற்கு வந்த முதலீடுகளில் சுமார் 68% போய் இருக்கிறது.
தமிழ்நாடு எங்கே
இந்த 5 மாநிலங்களுக்கு பிறகே 6வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. சுமார் 4.9% முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான் (4.3%), சத்தீஸ்கர் (3.9%), மத்தியப் பிரதேசம் (3.2%), உத்தரப் பிரதேசம் (2.7%) ஆகிய மாநிலங்கள் டாப் 10 மாநிலங்களுள் வருவதாக பாங்க் ஆஃப் பரோடா தனது ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
எந்தத் துறைக்கு அதிகம்!
துறை ரீதியாகப் பார்க்கும்போது மின்சாரத் துறையே அதிகபட்ச முதலீடுகள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு வந்த முதலீடுகளில் சுமார் 22.6% முதலீடுகள் மின்சாரத் துறைக்கே வந்துள்ளது. அதிலும் குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு அதிக முதலீடுகள் வந்துள்ளன. தொடர்ந்து உலோகத் துறைக்கு 17.3% கிடைத்துள்ளன. சாலைகள், ஆட்டோமொபைல், வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளுக்கும் கணிசமான முதலீடுகள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications