"என்னதான் பிரச்னை.." நள்ளிரவில் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய மீட்டிங்.. "அவரையே" சந்தித்து விளக்கம்
டெல்லி: அதிமுக பாஜக கூட்டணி முறிவு பேசுபொருள் ஆகியிருக்கும் நிலையில், டெல்லி சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு பாஜக தேசிய தலைவர்களைச் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில காலமாகத் தமிழக அரசியல் காலம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதிமுக பாஜக நீண்ட காலமாகக் கூட்டணியில் இணைந்து பயணித்தே வந்தது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தொடங்கி, சட்டசபைத் தேர்தல் வரை அவர்கள் கூட்டணி தொடர்ந்தது.

முக்கிய தேர்தல்களில் அவர்களால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை என்ற போதிலும், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி தொடர்ந்தே வந்தது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
கூட்டணி: பாஜக மாநிலத் தலைமைக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து ஒருவித மோதல் போக்கே நிலவி வந்தது. அவ்வப்போது இந்த மோதல் இருந்த போதிலும், தேசிய தலைமை தலையிட்டு இந்த மோதல் சரி செய்து வைத்து வந்தது. இதனால் முட்டல் மோதல்கள் இருந்த போதிலும் அதிமுக பாஜக கூட்டணி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து இயங்கி வந்தது. இது அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது அண்ணா குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடி வந்தார் என்பது போலக் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தலைவர்கள் இதற்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றினர். குறிப்பாக ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் நேரடியாகவே அண்ணாமலையை விமர்சித்தனர்.
முறிந்தது: இதற்கிடையே அதிமுக தலைவர்களும் டெல்லி சென்றனர். அவர்கள் பாஜக மாநில தலைவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இருப்பினும், அதற்கு எந்தவொரு பதிலும் வரவில்லை. இந்தச் சூழலில் தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முட்டல் மோதல்கள் இருந்த போதிலும், அதிமுக இந்த முடிவை எடுக்கும் எனப் பலரும் எதிர்பார்க்கவில்லை.
பாஜகவுக்கும் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில் பார்க்கும் போது, பாஜக கூட்டணியில் இருந்து பல முக்கிய கட்சிகள் வெளியேறிவிட்டது. தற்போதைய சூழலில் பாஜக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சியாக அதிமுக மட்டுமே இருந்தது. இப்போது அவர்களும் வெளியேறிவிட இது பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பான ரிப்போர்ட்டையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தலைமைக்குச் சமர்ப்பித்திருந்தார்.
டெல்லி பயணம்: இதற்கிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இப்போது திடீர் பயணமாக டெல்லிக்கும் சென்றுள்ளார். "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் அவர் யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். மூன்றாம் கட்ட யாத்திரை தொடங்க சில நாட்கள் இருக்கும் நிலையில், அவர் நேற்று திடீரென கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றிருந்தார். அவர் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமைக்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
நள்ளிரவில் மீட்டிங்: அதேபோல டெல்லி சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேற்றிரவே சந்தித்து விளக்கங்களைக் கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் நேற்றிரவு 8 மணிக்கு ஜேபி நட்டாவை அவரது இல்லத்திலேயே சென்று அண்ணாமலை சந்தித்துள்ளார். தொடர்ந்து இரவு 10.30க்கு உள் துறை அமித் ஷாவை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து விளக்கம் தந்ததாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக தானாக விலகவில்லை என்றும் இந்த நிலைக்குத் தள்ளியதே அண்ணாமலை என்று கூட்டணி முறிவு குறித்து அதிமுக தலைவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் அண்ணாமலை நேரடியாக டெல்லி சென்று கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமைக்கு விளக்கியுள்ளார்.
முன்னதாக நாளைய தினம் சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இதில் தேசிய அமைப்புச் செயலாளர் கூட்டம் பிஎல் சந்தோஷ் பங்கேற்க இருந்தார். இந்தச் சூழலில் அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளைய தினம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications