திகிலில் தில்லி.. ராகுல், பிரியங்கா,அகிலேஷ் ஐபோனை உளவு பார்க்கும் மத்திய அரசு? ஆப்பிள் அலர்டால் பரபர
டெல்லி: இந்தியா கூட்டணியில் உள்ள எம்பிக்களின் ஐபோன்களை மத்திய அரசு உதவியுடன் ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்ததாக அவர்கள் புகாரளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இஸ்ரேலிய உளவு நிறுவனமான பெகாசஸ் மூலமாக இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், மூத்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நீதிபதிகள், உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் என பலரது செல்போன்களை ஹேக் செய்து மத்திய அரசே உளவு பார்த்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி நாட்டையே அதிர வைத்தது. உலகம் முழுவதும் இப்படி பலர் வேவு பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவில் வேவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் தற்போது புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறார்கள் எதிர்க்கட்சி எம்பிக்கள். ஆம், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் சிவசேனா கட்சி மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் தங்களின் ஐபோனுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஒரு எச்சரிக்கை மெசேஜ் வந்ததாக ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்கள். அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் உங்கள் செல்போனை குறிவைக்கிறார்கள் என வந்த எச்சரிக்கை அலர்டை அவர்கள் பகிர்ந்து உள்ளனர்.
Received text & email from Apple warning me Govt trying to hack into my phone & email. @HMOIndia - get a life. Adani & PMO bullies - your fear makes me pity you. @priyankac19 - you, I , & 3 other INDIAns have got it so far . pic.twitter.com/2dPgv14xC0
— Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023
அதில், "அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் நீங்கள் குறிவைக்கப்பட்டு உள்ளீர்கள் என ஆப்பிள் நம்புகிறது. உங்கள் ஆப்பிள் ஐடி மூலம் இயக்கப்பட்டு வரும் ஐபோனை அவர்கள் வேறு பகுதியில் இருந்து இயக்க முயல்கிறார்கள். நீங்கள் யார் என்பதை வைத்தும் உங்களின் செயல்களின் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையில் அவர்க்ள் உங்களை குறி வைக்கிறார்கள். அரசு உதவியுடன் இயங்கும் ஹேக்கர்கள் உங்கள் ஐ போன்களை ஹேக் செய்துவிட்டால், அதன் பின்னர் அவர்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் ஐபோனையும், அதில் உள்ள தகவல்கள், தொலைதொடர்புகள், கேமரா, மைக் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.
இது தவறான அலாரமாக இருக்கலாம். ஆனால், இதை மிகவும் கவனத்துடன் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மஹுவா மொய்த்ரா வெளியிட்டு உள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் [email protected] என்ற ஈ மெயில் முகவரி மூலம் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருப்பது தெரிகிறது. சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதியும் இதை பகிர்ந்து, "உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு. இது குறித்து விசாரிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
So not just me but also @MahuaMoitra has received this warning from Apple. Will @HMOIndia investigate? https://t.co/aS01YQpRpB
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) October 31, 2023
இதேபோல் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த நிர்வாகி பவன் கெரா, காங்கிரஸ் எம்பி சசி தரூர், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனாடே உள்ளிட்டோரின் ஐபோன்களும் குறி வைக்கப்பட்டு இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் வார்னிங் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராகுல் காந்தி 12.30 மணியளவில் செய்தியாளர் சந்திப்பை நடத்த இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications