"டைனோசர்" காலத்துக்கு முன் பிறந்தது.. வடக்கில் பிரச்சனையாகும் ஆரவல்லி மலை.. கொதித்தெழும் மக்கள்
டெல்லி: வடமாநிலங்களில் திடீரென பொதுமக்கள் மத்திய அரசுக்கு எதிராக கொதித்தெழுந்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தின் பின்னணியில் ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்கும் விவகாரம் தான் உள்ளது. ஆனால் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட எந்த எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்காமல் கோட்டைவிட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ‛டைனோசர்' காலத்துக்கு முன்பே பிறந்த இந்த ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க மக்கள் களமிறங்கியது ஏன்? அதன் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஆரவல்லி.. இப்போது இந்திய அளவில் டிரெண்ட்டில் உள்ள விவகாரம்.. #savearavalli என்று எக்ஸ் உள்பட பல வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் மக்களின் பெரிய போராட்டமாக இது மாறலாம் என்று கூறப்படும் நிலையில் அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

ஆரவல்லி.. இது ஒரு மலைத்தொடராகும்... இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டில் உள்ள பழமையான மலைத்தொடர் இதுதான். சுமார் 2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. புரோட்டரோசோயிக் காலத்தை சேர்ந்ததாக சொல்லப்படும் ஆரவல்லி மலைத்தொடர், டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே உருவாகி உள்ளது.
நம் நாட்டில் இமயமலை, விந்திய, சாத்பூரா, மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் பூர்வாஞ்சல் மலைத்தொடர் உள்ளிட்டவற்றை ஒப்பிடும்போது இந்த ஆரவல்லி மலைத்தொடர் தனித்துவம் மிக்கது. இந்த ஆரவல்லி மலைத்தொடர் வடமேற்கு இந்தியாவின் முக்கிய மலைத்தொடராக உள்ளது. இந்த மலைத்தொடர் மொத்தம் 670 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
டெல்லியின் அருகே தொடங்கும் இந்த ஆரவல்லி மலைத்தொடர் தெற்கு ஹரியானா, ராஜஸ்தான் வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முடிவடைகிறது. இந்த மலைத்தெடாரின் மிகஉயரமான குன்று என்று 5,650 அடி உயரம் கொண்ட குரு சிகர் ஆகும். இது ராஜஸ்தானில் உள்ளது. இந்த ஆரவல்லி மலைத்தொடர் தான் தற்போது வடமாநிலங்களில் ‛டாக் ஆப் தி' டவுன் ஆக மாறி உள்ளது. பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களை தொடங்கி உள்ளனர். சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்ற சமூக வலைதளங்களில் SaveAravalli என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு மத்திய அரசு அளித்த பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது தான் முக்கிய காரணம். அதாவது ஆரவல்லி மலைத்தொடர் தொடர்ச்சியாக பல குன்றுகளை கொண்டுள்ளது. இந்த மலை தார் பாலைவனம் விரிவடையாமல் தடுப்பது, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லியில் மழைப்பொழிவை தரும் பணியை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி சம்பல், சபர்மதி, லூனி நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பல கனிம வளங்கள் புதைந்துள்ளன. ம மார்பிள், கிரானைட், துத்தநாகம், செம்பு, தங்கம், டங்ஸ்டன் போன்ற கனிமவளங்கள் அதிகம் உள்ளன.
இப்படியான சூழலி்ல் தான் ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆரவல்லி மலைத்தொடர் குறித்த புரிய வரையறை வழங்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் குழுவினர் சில பரிந்துகைளை நீதிமன்றத்தில் வழங்கி இருந்தன. அதில் ‛‛ஆரவல்லி மலை அதன் சுற்றியுள்ள நிலப்பரப்பில் இருந்து குறைந்தது 100 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தால் மட்டுமே "ஆரவல்லி மலை" என்று அங்கீகரிக்கப்படும். அதேபோல், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குன்றுகள் ஒன்றுக்கொன்று 500 மீட்டர் தொலைவுக்குள் இருந்தால் மட்டுமே "ஆரவல்லி மலைத்தொடர்" என்று கருதப்படும்'' என்று கூறியிருந்தது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதற்கு தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏனென்றால் ஆரவல்லி மலைத்தொடர் பல சிறிய குன்றுகளை உள்ளடக்கி உள்ளது. தற்போதைய இந்த புதிய வரையறை என்பது பல குன்றுகளை ஆரவல்லி மலைத்தொடரில் இருந்து விலக்கி வைக்கும். இதனால் அந்த பகுதிகளில் சுரங்க தொழில், ரியல் எஸ்டேட் தொழில் உள்ளிட்டவை அதிகரிக்கும் என்ற கூறி மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மேலும் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதியில் "ஆரவல்லியை காப்போம்" என்று மக்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படி மத்திய அரசுக்கு எதிராகவும், ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட எந்த எதிர்க்கட்சிகளும் இதனை கண்டுக்கொள்ளவில்லை. இத்தகைய மக்கள் போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவளிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில் அது இன்னும் அவர்களின் காதுகளுக்கு சென்று சேரவில்லை. இதனால் தற்போது மக்கள் முடிந்தவரை #SaveAravalli என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications