அண்ணாமலையால் திகைத்த திராவிட கட்சிகள்.. "ஜெயலலிதா பெரிய இந்துத்துவா லீடர் - பாஜகவைவிட பற்று ஜாஸ்தி"
டெல்லி: "மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மிகச்சிறந்த இந்து மதப்பற்றாளராக, தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டினார்... அவரது செயல்பாடுகளை பார்த்தால் அவர் மிகவும் உயர்ந்த இந்துத்தலைவர் என விளங்கும்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. இந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம், இரட்டை இலக்கமாக மாறும்.. தமிழகத்தில் பாஜக இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.

தொடர்ந்து அண்ணாமலை பேசும்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி, சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.. இதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அண்ணாமலை தந்த பேட்டியின் சுருக்கம் இதுதான்:
இரட்டை இலக்கு: "மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக இரட்டை இலக்க வாக்கு பெற்று 3வது பெரிய கட்சியாக உருவெடுக்கும்... ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்ப அதிக வாய்ப்புள்ளது.. ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை, தமிழ்நாட்டில் யாரையும் விட உயர்ந்த இந்துத்துவா தலைவராக இருந்தார்.
ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் பாஜக இருந்தாலும், இந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்து வந்தது... இந்து மதத்தின் வளர்ச்சிக்காக அவர் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலுக்கும் வெளிப்படையாகவே ஆதரவு வழங்கினார். தமிழகத்தில் மதமாற்ற தடுப்பு சட்டத்தையும் அமல்படுத்தினார். தன்னுடைய சம்பளத்தை கோவில்களுக்கு நன்கொடையாக அளித்தது, கோவில் நகரமான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார்.
புனரமைப்பு பணிகள்: கோவில்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டார். கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக அளித்தார். இதையெல்லாம் வைத்து அவருடைய இந்து மதப்பற்றை தெளிவாகவே நாம் புரிந்து கொள்ளலாம்.
கடந்த 2014க்கு முன்பு, பாஜவா அல்லது ஜெயலலிதாவா என்று பார்க்கும்போது, இயற்கையான தேர்வு. ஒரு இந்து வாக்காளருக்கு ஜெயலலிதாவாக இருப்பார்.. காரணம், அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டினார்... 2002-03ல் தமிழ்நாட்டில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தார்... அவரது செயல்பாடுகளை பார்த்தால் அவர் மிகவும் உயர்ந்த இந்துத்தலைவர்.
இந்துத்துவா கொள்கை: ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகியது. எனவே, தமிழகத்தில் உள்ள இந்துத்வா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது.
இந்துக்கள் இப்போது இயல்பாகவே பாஜகவைத்தான் தேர்வு செய்கிறார்கள். காரணம், இப்போது ஜெயலலிதாவை விட்டு விலகி அதிமுக தொலைதூரத்தில் உள்ளது... தமிழ்நாட்டில் புதிய தலைமையை உருவாக்க 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் பாஜக தலைமை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
அதிமுக: திராவிட கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை, இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை அளித்த இந்த பேட்டியானது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.. சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக, படாதபாடு பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, இதற்கு என்ன பதிலடி தரப்போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications