தெய்வமே இங்கேயுமா? காங்கிரசுக்கு “ஷாக்”.. கர்நாடகா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மபியிலும் ஆம் ஆத்மி போட்டி
கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது.
டெல்லி: இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட இருக்கும் நிலையில், மார்ச் 4 ஆம் தேதி முதல் அர்விந்த் கெஜ்ரிவால் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது.
கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சியில் இருந்த நிலையில் ஆபரேசன் தாமரையின் மூலமாக இடைபட்ட காலத்தில் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது.

கர்நாடக தேர்தல்
இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவை பொறுத்தவரை ஆளும் பாஜக, காங்கிரஸ், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி
குமாரசாமியும் தனித்து போட்டியிடும் திட்டத்தில் உள்ளதால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில்தான், காங்கிரஸுக்கு அடுத்த தலைவலியாக அமைந்து இருக்கிறது ஆம் ஆத்மியின் அறிவிப்பு. 4 மாநில தேர்தல்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது.

ஆம் ஆத்மியின் வளர்ச்சி
டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநில தேர்தலிலும் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சிஅதேபோல் குஜராத், இமாச்சல பிரதேச மாநில தேர்தலில் தோல்வியடைந்தாலும், குஜராத்தில் ஆம் ஆத்மி 5 தொகுதிகளை கைப்பற்றி 13 சதவீத வாக்குகளை பெற்றது. இதனால், பல தொகுதிகளில் வாக்குகள் சிதறி காங்கிரஸ் தோல்வியடைந்தது.

அர்விந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம்
இந்த நிலையில்தான் வரும் மார்ச் 4 ஆம் தேதியே கர்நாடக மாநிலத்துக்கு அர்விந்த் கெஜ்ரிவால் சுற்றுப் பயணம் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மார்ச் 5 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்திலும், மார்ச் 13 ஆம் தேதி ராஜஸ்தானிலும் அர்விந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

மபி, ராஜஸ்தான்
அடுத்ததாக பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் மார்ச் 14 ஆம் தேதி அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கர்நாடகாவில் 28 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தது.

அதிக தொகுதிகளில் போட்டி
ஆனால், இம்முறை காங்கிரஸுக்கு மாற்றான ஒரு தேசிய கட்சியை ஆம் ஆத்மியை நிலைநிறுத்த முயற்சித்து வரும் அர்விந்த் கெஜ்ரிவால், அதிக தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் கடந்த முறை சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பெரும்பான்மையான தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்ட நிலையில் இம்முறை அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட ஆயத்தமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications