போயிங் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு.. விமான போக்குவரத்து அமைப்பிடம் இருந்து பறந்த உத்தரவு
டெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக முதல் கட்ட அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், போயிங் ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. விமானங்களில் என்ஜின்களுக்கு எரிபொருள் சப்ளை செய்யும், கட்டுப்படுத்தும் சுவிட்ச்களை ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் இந்த பணிகளை 21 ஆம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏ.ஏ.ஐ.பி.) சிறப்புக் குழு விசாரணை நடத்தியது.

அகமதாபாத் விமான விபத்து
விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், உயிர் பிழைத்த பயணியின் வாக்குமூலம் அடிப்படையில் சிறப்பு குழு முதல் கட்ட விசாரணை நடத்தி விமான போக்குவரத்து துறையிடம் சில நாட்களுக்கு முன்பு அறிக்கையை கொடுத்தது. அந்த அறிக்கையில், விமானத்தின் எண்-1, என்-2 ஆகிய இரு என்ஜின்களுக்கான எரிபொருள் சுவிட்ச்கள், அடுத்தடுத்து செயலிழந்து 'ஆஃப்' ஆனதால், தேவையான எரிபொருள் செல்லாமல் விமானத்தின் வேகம் குறைந்துள்ளது.
தேவையான உந்து சக்தி கிடைக்காததால், சுவிட்ச்களை செக் செய்துள்ளார். அப்போது ஒரு சுவிட்ச் ஆப் செய்து இருந்ததை பார்த்த விமானி, மற்றொரு விமானியிடம் ஏன் ஆப் செய்தீர்கள் என்று கேட்கிறார். இதற்கு அவர் நான் ஆஃப் செய்யவில்லை. அதற்கு மற்றொரு விமானி நான் எரிபொருள் இணைப்பை துண்டிக்கவில்லை என்று சொல்வது விமானிகளின் உரையாடலில் தெரியவந்துள்ளது.
முதல்கட்ட அறிக்கை
இதன் மூலம் என்ஜின்கள் எரிபொருள் இல்லாமல் செயலிழந்தது உறுதியாகி இருக்கிறது. விமானிகள் விமானத்தை மேலே எழுப்ப முயற்சி செய்துள்ளனர். முதல் என்ஜின் சற்று ஒத்துழைப்பு கொடுத்து பிறகு பழுதாகி உள்ளது. 2-வது என்ஜின் முழுமையாக செயலிழந்து விட்டது. இதனால் விமானிகளால் எதுவும் செய்ய இயலாமல் போய் விட்டது. அடுத்த வினாடி விமானிகள் உதவி கேட்டு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் அடுத்த ஓரிரு வினாடிகளில் விமானம் கீழே இறங்கி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முதல் கட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. எனினும், முதல் கட்ட அறிக்கையை வைத்து இறுதி முடிவுக்கு வரக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய உத்தரவு பிறப்பிப்பு
இதற்கிடையே, போயிங்க் ரக விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கு மிக முக்கிய உத்தரவை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் பிறப்பித்துள்ளது. அதாவது, என்ஜின்களுக்கு எரிபொருள் சப்ளை செய்யும், கட்டுப்படுத்தும் சுவிட்ச்களை மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வரும் 21 ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே போயிங் ரக விமானங்களை இயக்கி வருகிறது. இதில் ஏர் இந்தியாவிடம் 30 விமானங்கள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் இத்தகைய பரிசோதனைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும், இதில் எந்த குறைபாடும் கண்டறியப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications