"அதே ஸ்டைல்.." பெங்களூர் குண்டுவெடிப்பிற்கும்! மங்களூர் ஐஎஸ் பயங்கரவாத சம்பவத்திற்கும் பகீர் தொடர்பு?
டெல்லி: பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்கும் 2022 மங்களூர் குண்டுவெடிப்பிற்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த விபத்தில் 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

பெங்களூரில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
விசாரணை தீவிரம்: முதற்கட்ட விசாரணையில் எஃகு டிபன் பாக்ஸில் இருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நடந்தது உறுதியாகியுள்ளது. டிஜிட்டல் டைமர் மூலம் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது பலவீனமாக இருந்ததால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதில் பல்ப் இழை தான் டெட்டனேட்டராகச் செயல்பட்டதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதில் இருந்த வெடிபொருள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்தே இதைத் தயார் செய்துள்ளனர். இதன் காரணமாகவே குண்டு பலவீனமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெட்டனேட்டர்: இதுபோன்ற ஃபிலமென்ட் டெட்டனேட்டர் பொதுவாக எஸ் பயங்கரவாதிகளால் தான் பயன்படுத்தப்படுமாம். கடந்த 2022 நவ. மாதம் மங்களூருவில் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பிலும் இதே முறை பின்பற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்குப் பல ஒற்றுமைகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகமது ஷாரிக் கைது செய்யப்பட்டுள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அவரிடம் இப்போது பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாகவும் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசம்: அதேநேரம் இரு சம்பவத்திலும் டெட்டனேட்டர் ஒரே போல இருந்தாலும் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட சில அம்சங்கள் சற்று வித்தியாசமாக இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். எனவே, இப்போதே எந்தவொரு முடிவை எடுக்காமல் விசாரணையில் கவனம் செலுத்த உள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். பெங்களூர் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏ-க்கு மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
மங்களூர் குண்டுவெடிப்பு: கடந்த 2022 நவம்பர் 19ஆம் தேதி 24 வயதான முகமது ஷாரிக் என்ற நபர் மங்களூருவில் ஆட்டோ ரிக்ஷாவில் வெடிகுண்டை எடுத்துச் சென்றுள்ளார். குக்கர் ஒன்றில் வைத்து அவர் வெடிகுண்டை எடுத்துச் சென்ற நிலையில், அப்போது அவரது மடியில் வைத்திருந்த பையில் இருந்த குண்டு எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இதில் 40 சதவீத தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குக் கைது செய்யப்பட்டார்.
அந்த எளிதாகக் கிடைக்கும் பொட்டாசியம் நைட்ரேட், அதாவது துப்பாக்கிக்கு பயன்படும் கன் பவுடரை வைத்து வெடிகுண்டை உருவாக்கியதும் தெரிய வந்தது. இதுபோன்ற பொருட்களை வைத்து அனுபவம் இல்லாத நபர்கள் கூட எளிதாக ஐஇடி குண்டுகளைத் தயாரிக்க முடியும் என போலீசார் கூறுகிறார்கள். மங்களூர் குண்டுவெடிப்பில் கூட குற்றவாளிகள் தங்கள் வீடியோவை பார்த்தே குண்டுகளைத் தயார் செய்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications