ராகேஷ் கிஷோர் வழக்கறிஞராக பணியாற்ற தடை.. தலைமை நீதிபதி மீது காலணி வீச்சால் பார் கவுன்சில் அதிரடி
டெல்லி: ராகேஷ் கிஷோர் வழக்கறிஞராக பணியாற்ற தற்காலிகத் தடை விதித்துள்ளது இந்திய பார் கவுன்சில். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி காலணி வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள ராகேஷ் கிஷோர் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரணை நடத்தி வந்தார். அப்படி ஒரு வழக்கு விசாரணையின்போது, அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென தனது காலணியைக் கழற்றி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நோக்கி வீச முயன்றார். ஆனால், காலணி நீதிமன்ற அமர்வின் முன்னாலேயே விழுந்தது.

உடனே அங்கிருந்த நீதிமன்ற காவலர்கள், அந்த வழக்கறிஞரை மடக்கிப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" என கோஷமிட்டார். தொடர்ந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்திய நீதிமன்ற காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதே நேரத்தில் தலைமை நீதிபதி கவாய் அமைதியாக இருந்து, இடையூறு இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தார். மேலும், "இதனால் எல்லாம் திசைதிருப்பப்பட வேண்டாம். இவை எல்லாம் என்னைப் பாதிக்காது, விசாரணையைத் தொடருங்கள்" என்று தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
ராகேஷ் கிஷோர் 2011 முதல் வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிராக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
செப்டம்பரில், மத்திய பிரதேசத்தில் உள்ள ஜவாரி கோவிலில் உள்ள 7 அடி விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி கவாய், மனுதாரரிடம், "இது முற்றிலும் விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு. போய் இப்போது கடவுளிடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
இந்த கருத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்தது. இந்தச் சூஅலில் தான், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி விச முயன்றுள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் வழக்கறிஞராகப் பணியாற்ற தற்காலிகத் தடை விதித்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மேலும், தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர் மீது ஒழுங்கு நடவடிக்கையையும் இந்திய பார் கவுன்சில் மேற்கொண்டுள்ளது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், உடனடியாகப் பயிற்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் என பார் கவுன்சில் அறிவித்துள்ளது. ராகேஷ் கிஷோர் தனது இடைநீக்க காலத்தில் இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது அதிகாரசபையிலும் ஆஜராகவோ, செயல்படவோ, வாதிடவோ அல்லது பயிற்சி செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications