பீகார் கொடுத்த ட்விஸ்ட்.. வரலாற்றிலேயே நடக்காதது.. வாக்குப்பதிவு 9% உயர்ந்தும் மாறாத ஆட்சி!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் கடந்த தேர்தலை விட 9% அதிக வாக்குப்பதிவு நடந்தது. மிக அதிக வாக்குப்பதிவு உயர்வின்போதெல்லாம் பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ஆனால், இந்த வரலாற்றை இந்த முறை மாற்றி எழுதியுள்ளனர் பீகார் வாக்காளர்கள். வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்தபோதும், ஆளுங்கட்சி கூட்டணி மீண்டும் வென்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. கடந்த 6 ஆம் தேதிமுதல்கட்டமாக, 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பீகார் வரலாற்றிலேயே இல்லாத வகையில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 11 ஆம் தேதி நடைபெற்றது. 2ம் கட்ட வாக்குப்பதிவில் 68.6% வாக்குகள் பதிவாகின.

மொத்தமாக பீகார் சட்டசபை தேர்தலில் 66.91% வாக்குகள் பதிவாகின. அதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலை விட சுமார் 9.62% வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளது. 57.29% வாக்குகள் மட்டுமே கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவாகியிருந்தது. பொதுவாகவே வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்கு என்றே கருதப்படும்.
பீகார் தேர்தல் வரலாற்றைப் பொருத்தவரை, 5% அளவிற்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் மூன்று முறை இவ்வாறு நடந்திருக்கிறது. 1962 தேர்தலை விட 1967 தேர்தலில் வாக்குப்பதிவு 7% உயர்ந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைத்தது.
1977 தேர்தலை விட 1980 தேர்தலில் 6.8% வாக்குகள் பதிவானது. அப்போது ஜனதா தளம் ஆட்சியை இழந்து, மீண்டும் காங்கிரஸ் அரியணை ஏறியது. அதேபோல், 1985 தேர்தலை விட 1990 தேர்தலில் 5.8% வாக்குப்பதிவு அதிகரித்தபோது, காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. லாலு பிரசாந்த் யாதவ்வின் ஜனதா தளம் கட்சி அப்போது ஆட்சியைப் பிடித்தது. லாலு பிரசாத் யாதவ் முதல்வரானது அதுவே முதல்முறை.
அந்த வகையில், இந்த முறை 9.62% வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்தக் கூற்றை உடைக்கும் வகையில் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது.
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பாஜக - ஜேடியு கூட்டணி 189 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 50 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம், மீண்டும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது.
பெண்கள் தான் பீகாரில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தற்போது உருவெடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். பீகாரில் மொத்தமாக 66.91% வாக்குகள் பதிவாகின. இதில் ஆண்களின் வாக்குகள் - 62.8 சதவீதமும், பெண்களின் வாக்குவாதம் - 71.6 சதவீதமும் பதிவானது அதாவது பெண்கள் பெரும்பாலானோர் வாக்களித்திருக்கிறார்கள். பெண்களின் அதிகபட்ச ஆதரவு காரணமாகவே, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்டிஏ கூட்டணி.












Click it and Unblock the Notifications