பில்கிஸ் பானோ பலாத்காரம்.. 2 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிவிட்டு உச்ச நீதிமன்றம் சொன்ன காரணம்!
டெல்லி: 2002 குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு குற்றவாளிகளின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடந்த வன்முறையில் பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். இருப்பினும், அவரை சிலர் கூட்டு பலாத்காரம் செய்தனர். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பிபின்சந்த் கனையாலால் ஜோஷி மற்றும் பிரதீப் ராமன்லால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தொடர்ந்தனர்.

ஜாமீன்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், இதற்கான நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கில் இருவரும் 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததை உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியது. அவர்களில் ஒருவர் உடல் உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
மேலும், இரு குற்றவாளிகளில் ஒருவர் முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்படாதவர் என்றும் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வாதம்
தங்களது தண்டனையை எதிர்த்து அவர்கள் இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், இருவரின் குற்றவாளி என்ற அறிவித்து, ஆயுள் தண்டனையையும் உறுதி செய்திருந்தது. இருவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சம்பவம் நடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இருப்பினும் 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளதாகவும் வாதிட்டனர்.
இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுக்களில் இன்னும் முடிவு செய்யப்பட வேண்டிய சில விவகாரங்கள் இருப்பதாக குறிப்பிட்டது. இதையடுத்து விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
பில்கிஸ் பானோ வழக்கு
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது அவரது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே 11 குற்றவாளிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில் குஜராத் அரசு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த தண்டனை குறைப்பு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் 2024 ஜனவரியில் ரத்து செய்தது. மேலும், விடுதலை செய்யப்பட்ட 11 பேரும் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில் தற்போது இரு குற்றவாளிகளுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருப்பதையும், நீண்டகால சிறைவாசத்தையும் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.




Click it and Unblock the Notifications
