நாதுராம் கோட்சே தேசபக்தரா?.. பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம்.. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
டெல்லி: நாதுராம் கோட்சே தேசபக்தர் என கூறிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூருக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கூறிய போது சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கமலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்கையில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இவரும் ஒரு வகையில் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசியிருந்தார். இந்த நிலையில் போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் கூறுகையில் நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தராக இருந்தார். அவர் தேசபக்தராக இருக்கிறார். தேசபக்தராகவே இருப்பார்.
அவரை தீவிரவாதி என சொல்பவர்களுக்கு இந்த தேர்தலில் பதிலடி கொடுங்கள் என தெரிவித்திருந்தார் பிரக்யா சிங். தேசப்பிதா மகாத்மாவை கொன்றவர் எப்படி தேசபக்தர் ஆக முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து தேர்தல் நேரத்தில் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பாத பாஜக, பிரக்யா சிங் தாகூருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
GVL Narasimha Rao, BJP on Pragya Singh Thakur's statement "Nathuram Godse was, is & will remain a 'deshbhakt": BJP does not agree with this statement, we condemn it. Party will ask her for clarification, she should apologise publicly for this statement. pic.twitter.com/yBEs8nQoWW
— ANI (@ANI) May 16, 2019
இதுகுறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் கூறுகையில், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்ற கருத்தை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. அது பிரக்யா சிங்கின் கருத்தாகும். அவர் அவ்வாறு கூறியதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இது போல் சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய அவரிடம் விளக்கம் கேட்போம். சர்ச்சை கருத்தை வெளியிட்ட பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங்கிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாஜகவை எதிர்க்கட்சிகள் கண்டித்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு கருத்தை அவர் வெளியிட்டது பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications