கேள்வி கேட்டால் அவமானப்படுத்துவார்கள்.. அதுதான் பாஜக.. அன்னபூர்ணா விவகாரம்! பிரியங்கா காந்தி தாக்கு
டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ளார். கேள்வி கேட்போரை அவமானப்படுத்துவதையே பாஜக வாடிக்கையாக வைத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பல தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

திடீர் சர்ச்சை: அப்போது அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி முறை குறித்துப் பேசியிருந்தார். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஜிஎஸ்டி இருப்பதால் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்த அவர் குறைத்தால் அனைத்துக்கும் குறையுங்கள். இல்லையென்றால் ஒரே மாதிரி உயர்த்திவிடுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார். கொங்கு ஸ்டைலில் அவர் பேசிய பேச்சு இணையத்தில் டிரெண்டானது.
இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் கோவை அன்னபூர்ணா உரிமையாளர் அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார். இது தொடர்பான வீடியோவை பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இருப்பினும், பாஜக தான் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்தாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
பிரியங்கா காந்தி கண்டனம்: இந்தச் சூழலில் காங்கிரஸின் பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "கேள்விகளைக் கேளுங்கள், அவமானப்படுங்கள் - மோடி அரசின் பதில் இதுதான்.. கோவையில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், மோடி அரசின் சிக்கலான ஜிஎஸ்டி குறித்து நிதி அமைச்சரிடம் கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக அவமானப்படுத்தப்பட்டார்.
ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி சுமை குறித்து நியாயமான தனது கவலையை எழுப்பினார்.. இதற்காக அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கேமரா முன்பு கட்டாய மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இது மத்திய அரசு வழக்கமாகக் கையாளும் பிளேபுக் மிரட்டல் தந்திரம் தான்.
பேரழிவு கொள்கை: பாஜக அரசின் அரசாங்கத்தின் பேரழிவுகரமான கொள்கைகள்- முதலில் பணமதிப்பு நீக்கம், இப்போது மிகவும் சிக்கலான ஜிஎஸ்டி கொள்கை காரணமாகச் சிறு குறு வணிகர்கள் மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் சிக்கித் தவிக்கின்றன. அதேநேரம் பாஜக ஆதரவு செல்வந்தர்களுக்குத் தான் இங்கு அனைத்தும் கிடைக்கிறது.. அதிக வரி குறைப்புகள், கடன் தள்ளுபடிகள் மற்றும் விதிகள் தங்களுக்கு ஆதரவாக மாற்றப்பட்டது எனப் பல மோசடிகள் நடக்கிறது.
எளிமையான, நியாயமான ஜிஎஸ்டி தேவை என்பதைக் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.. ஆனால் இந்த அரசு பிரச்சனைகளைத் தீர்ப்பதை விடக் கேள்வி எழுப்புவோரின் குரல்களை அடக்குவதில் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது. இந்த அரசு மக்களைப் புறக்கணிப்பதை விட்டுவிட்டு, பணக்காரர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன் தரும் ஜிஎஸ்டியை கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications