ஆமா அது தேஜஸ்வி சூர்யாவா? தேஜஸ்வி யாதவா! கன்பியூஸ் ஆன கங்கனா- சொந்த கட்சிக்காரர் மீதே சரமாரி தாக்கு
டெல்லி: பாஜக சார்பில் தேர்தலில் களமிறங்கும் கங்கனா ரனாவத் இன்று பிரச்சார கூட்டத்தில் பேசும் போது எதிர்க்கட்சியில் உள்ள தேஜஸ்வி யாதவை சாடுவதற்குப் பதிலாகத் தனது சொந்த கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவை சாடியதால் குழப்பம் ஏற்பட்டது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்னும் ஐந்து கட்ட தேர்தல் வரும் நாட்களில் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக பல்வேறு புதுமுகங்களைக் களமிறக்கியுள்ளது.. அதன்படி இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் களமிறங்குகிறார்.
கன்பியூஸ் ஆன கங்கனா: இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 4 லோக்சபா தொகுதிகளில் இருக்கும் நிலையில், அங்கு அனைத்து தொகுதிகளுக்கும் வரும் ஜூன் 1ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனால் கங்கனா அங்கு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அப்படி தான் அவர் சுந்தர்நகர் தொகுதியில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசும் போது இந்தியா கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவை தாக்கி பேசுவதாக நினைத்து தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்துச் சாடினார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய கங்கனா ரனாவத், "கெட்டுப்போன இளவரசர்கள் எல்லாம் சேர்ந்து இப்போது விருந்து வைக்கிறார்கள். ராகுல் காந்தி சந்திரனில் உருளைக்கிழங்கு வளர்க்க விரும்புகிறார்.. தேஜஸ்வி சூர்யா போக்கிரித்தனம் செய்து மீன் பிடித்துச் சாப்பிட விரும்புகிறார்" என்று பேசியிருந்தார்.
மாற்றி பேசிய கங்கனா: ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை தான் மீன் சாப்பிடும் உவமையை வைத்து விமர்சிக்க கங்கனா நினைத்தார். ஆனால், தேஜஸ்வி யாதவிற்கு பதிலாகத் தவறுதலாகத் தேஜஸ்வி சூர்யாவை கங்கனா சாடிவிட்டார். தேஜஸ்வி சூர்யா பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவர். அவர் கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இப்படி பெயரை மாற்றி விமர்சித்த கங்கனா ரணாவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கங்கனாவை சாடினார். இதற்கிடையே தேஜஸ்வி யாதவும் கூட இந்த வீடியோவை பகிர்ந்து, "ஆமா இந்த பெண் யார்?" என்று நக்கலாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
விமர்சனம்: இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே கங்கனா ரணாவத் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடி வருகிறார்.. குறிப்பாக அவர் ராகுல் காந்தியைத் தான் நேரடியாக விமர்சித்து வருகிறார்.
மண்டி நாடாளுமன்றத் தொகுதியின் சுந்தர்நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கங்கனா ரனாவத், இமாச்சல பிரதேசத்திலும் சரி டெல்லி தலைமையிலும் சரி குடும்ப அரசியலைப் பின்பற்றி வருவதாகச் சாடினார். மேலும், ராகுல் காந்திக்கு நாட்டின் வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை என்று சாடிய அவர், நடைமுறைக்கு மாறான விஷயங்களையே காங்கிரஸ் பேசி வருவதாக கங்கனா சாடியுள்ளார்.
காங்கிரஸ் பதிலடி: இதற்கிடையே தேஜஸ்வி யாதவிற்கு பதிலாகத் தேஜஸ்வி சூர்யா என மாற்றி தாக்கிய கங்கனாவின் வீடியோ இணையத்தில் டிரெண்டானது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் இப்போது பதிலடி கொடுத்துள்ளது. வாரிசு அரசியல் என்று பேசும் முன்பு கங்கனா பெயரைச் சரி பார்க்க வேண்டும் என்று காங்கிரஸின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் அம்ரித் கவுர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications