பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக் குறைவு.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
டெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி உடல் நலக் குறைவு காரணமாக இரவு நேரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 96. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் அத்வானிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது எனவும் தொடர்ந்து மருத்துவர்கள் கணகாணித்து வருகின்றனர் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அவர் எய்ம்ஸ் முதியோர் பிரிவு மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
கராச்சியில் பிறந்த அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் இயக்கமான பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து தொடங்கிய அவர், பாஜகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவின் அகில இந்திய தலைவராக நீண்டகாலம் பணியாற்றி உள்ளார். அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை முடிவில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அத்வானி, அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அத்வானி. 2015 ஆம் ஆண்டு எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அண்மையில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அத்வானிக்கு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications