“பழமைவாத கூட்டம்..” இஸ்லாமிய எம்பி குறித்த பாஜக எம்பியின் கருத்து.. சு.வெங்கடேசன் கடும் கண்டனம்
டெல்லி: சந்திரயான் 3 வெற்றிக்கு பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து நேற்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அதில் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்துக்கள் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த வெற்றியையடுத்து பல்வேறு தரப்பினரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து நேற்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலிக்கு எதிராக கூறிய கருத்துக்கள் கடுமையான சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சந்திராயன்:3 வெற்றியைப் பாராட்டும் விதமாக மக்களவையில் நடந்த விவாதத்தில் BJP
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 22, 2023
எம் பிக்கள் பேசிய காணொலிகளை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்.
அறிவியலுக்கு எதிரான பழமைவாத பித்துப்பிடித்த ஒரு கூட்டத்திடம் இந்த தேசம் எப்படி சிக்கிக்கிடக்கிறது என்பதன் சான்றுகள் அவை. 1/2 pic.twitter.com/KjPiinaoJc
ரமேஷ் பிதுரி, இஸ்லாமிய எம்பியான டேனிஷ் அலியை பார்த்து, "ஏய் போராளி, ஏய் முஸ்லீம் பயங்கரவாதி" என்று கத்தி கூச்சலிட்டு அவரை விமர்சித்துள்ளார். வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஒருவர் இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பாஜக எம்பி பிதுரி பாராளுமன்றத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனையும் அவமதிக்கும் மொழியில் பேசியுள்ளார். பாஜக ஏன் அவரை இடைநீக்கம் செய்யாமல் இன்னும் பாதுகாத்து வருகிறது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சரும் மக்களவையின் துணைத் தலைவருமான ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசனும் இதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது, "அறிவியலுக்கு எதிரான பழமைவாத பித்துப்பிடித்த ஒரு கூட்டத்திடம் இந்த தேசம் எப்படி சிக்கிக்கிடக்கிறது என்பதன் சான்றுகள்தான் நேற்று BJP
எம்பிக்கள் பேசிய காணொலிகள்.
இதன் உச்சமாக எதிர் கட்சி MP களை தீவிரவாதிகள் என்றும் மாமாக்காரர்கள் என்றும் இன்னும் மோசமான பல வார்த்தைகளைக் கொண்டும் தாக்கினார்கள். அறிவியல் பார்வை, சந்திரயான் வெற்றி, இந்தியா கூட்டணி, அவையின் மாண்பு அனைத்தும் ஒரு சேர ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று" என்று தனது x சோஷியல் மீடியாவில் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications