பாஜக ஆட்சி மன்றக் குழு அடுத்தடுத்து வியூகம்- எடியூரப்பாவுக்கு அதிமுக்கியத்துவம்... யோகிக்கு குட்பை!
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தல் மற்றும் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தொடர்பாக டெல்லியில் இன்று பாஜக ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட எந்த ஒரு மாநில முதல்வரும் பாஜக ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெறவில்லை.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் ஆட்சி மன்றக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அக்குழுவில் இடம்பெற்றார். பின்னர் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாட்டின் பிரதமரானார். 2019 லோக்சபா தேர்தலிலும் பாஜக வெல்ல, மீண்டும் 2-வது முறையாக பிரதமரானார் நரேந்திர மோடி.

8 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா இடம்பெற்றார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மபி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். அஸ்ஸாம் பழங்குடிகள் முகமான மாஜி முதல்வர் சர்பானந்தா சோனோவால், ஹரியானா முன்னாள் எம்பி சுதா யாதவ், தெலுங்கானா ஓபிசி தலைவர் லக்ஷ்மண், சிறுபான்மை குழு தலைவர் இக்பால்சிங் லால்புரா, தலித் தலைவரான கவிஞர் சத்யநாராயணன் ஜதியா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர். வழக்கம் போல பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அமைப்பு பொதுச் செயலாளரும் மத்திய அமைச்சருமான பிஎல் சந்தோஷ் ஆகியோரும் பாஜக ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெற்றனர். பல்வேறு ஜாதிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதில் ஜேபி நட்டா உறுதியாகவே இருந்தார் என்கின்றன அக்கட்சி டெல்லி வட்டாரங்கள்.
கர்நாடகா முன்னாள் முதல்வர், கர்நாடகா பாஜகவின் முகம் எடியூரப்பா, பாஜக ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெற்றது தொடர்பாக நாம் பாஜக வட்டாரங்களில் பேசினோம். எடியூரப்பாவுக்கு கர்நாடகாவின் லிங்காயத் சமூக ஆதரவு முழுமையாக உள்ளது. முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கியதால் அதிருப்தியில் இருக்கிறார்; தேர்தல் நேரத்தில் திடீரென பாஜகவுக்கு எதிராக ஏதேனும் எடியூரப்பா முயற்சிகளை எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் நாடாளுமன்ற குழுவில் இணைக்கப்பட்டார் என கூறப்படுகிறது. அத்துடன் கர்நாடகா சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் எடியூரப்பாவின் இருப்பு அவசியம் என பாஜக மேலிடம் கருதுகிறதாம்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் எடியூரப்பாவை அமித்ஷா சந்தித்து பேசினார். கர்நாடகா பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் முட்டி மோதுகிறவராக எடியூரப்பா இருந்து வந்தார். இந்த நிலையில் எடியூரப்பாவுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் ஆட்சி மன்ற குழுவில் அவர் இடம்பெற்றிருப்பதை ஏற்கனவே பசவராஜ் பொம்மை வரவேற்றிருந்தார். இன்னொரு விவகாரத்தையும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் ஒருவித சமிக்ஞையுடன் சுட்டிக்காட்டுகின்றன. ஆட்சி மன்றக் குழு மாற்றத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம்பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி எல்லாம் விட்டுவிடமாட்டோம் என்ற தொனியில் எந்த ஒரு மாநில முதல்வருக்கும் பாஜக ஆட்சி மன்ற குழுவில் வாய்ப்பு தரப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில்தான் டெல்லியில் இன்று பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் அடுத்தடுத்து தொடர்ந்து கூட்டப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா தேர்தல், நாடாளுமன்ற விவகாரங்கள், லோக்சபா தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டனவாம்.












Click it and Unblock the Notifications