புதிய போர்க்களமாக நாடாளுமன்றம் காந்தி சிலை! பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணி போட்டி போட்டு போராட்டம்!
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் இன்று அம்மாநில ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மணிப்பூர் விவகாரத்தில் இதே காந்தி சிலை அருகே 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் அறிவித்த நிலையில் அதே இடத்தில் பாஜக எம்.பி.க்கள் திடீர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக பல்வேறு கட்சிகளும் கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்திய படி போராட்டங்களை நடத்துவது வழக்கம். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படும்.

மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர்.
அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை கொடுத்தும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் ஒன்று கூடினர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர். இது தொடர்பான பதாகைகளையும் அவர்கள் ஏந்தி இருந்தனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அண்மையில் பேசியிருந்த பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்தார். சத்தீஸ்கர்- ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, ராஜஸ்தான் பாஜக எம்பிக்கள் பிரதமர் மோடியின் கருத்தை வலியுறுத்தும் வகையில் போராட்டம் நடத்தி உள்ளனர்.
அதுவும் 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த காந்தி சிலை அருகே இந்த போராட்டம் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications