ஏன் இந்த குழப்பம்? ஜம்மு காஷ்மீர் வேட்பாளர்கள் பட்டியலை வாபஸ் பெற்று மீண்டும் ரிலீஸ் செய்த பாஜக!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 44 வேட்பாளர்களை அறிவித்த பாஜக மேலிடம் திடீரென அந்த வேட்பாளர்கள் பட்டியலை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை மீண்டும் வெளியிட்டிருக்கிறது பாஜக. அதிலும் 15 வேட்பாளர்கள்தான் இடம் பெற்றிருக்கின்றனர். இதற்கு முன்னர் இல்லாத வகையில் பாஜக மேலிடம் இப்படியான குழப்ப நிலைக்கு ஏன் தள்ளப்பட்டுள்ளது என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் தற்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த வேட்பு மனுத் தாக்கல் மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. 4 நாட்களில் மொத்தமே 14 பேர் மட்டுமே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். 24 தொகுதிகளில் நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.
காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸும் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் சிபிஎம் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையிலேயே சில தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு, எங்கள் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியை ஆதரிக்க தயார் என தெரிவித்துள்ளது. பிரதான இந்த கட்சிகள் தவிர சிறிய கட்சிகளும் தேர்தலில் களம் காண்கின்றன.
இந்த நிலையில் இன்று பாஜக 44 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவித்தது. இதனால் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்றும் நாளையும் பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்த சிறிது நேரத்திலேயே அந்த பட்டியலை வாபஸ் பெறுவதாக அறிவித்தது பாஜக. இதனால் ஜம்மு காஷ்மீர் பாஜகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் மாறியது. இதனையடுத்து திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலை மீண்டும் பாஜக வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த திருத்தப்பட்ட பட்டியலில் 15 வேட்பாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications