பீகாரில் 200+ தொகுதிகளில் முன்னிலை.. ஆனாலும் வெறிச்சோடி கிடக்கும் பாஜக அலுவலகம்.. என்ன காரணம்?
டெல்லி: பீகார் மாநிலத்தில் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 200+ தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும் கூட டெல்லி பாஜக அலுவலகத்தில் பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லை. இதற்கான காரணம் புரியாமல் பாஜக தொண்டர்கள் இருந்த நிலையில், இது தொடர்பாகச் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்குக் கடந்த நவம்பர் 6ம் தேதி முதற்கட்டமாக 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி 123 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இந்த முறை பீகாரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கிடையே இன்றைய தினம் அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

பாஜகவுக்கு மெகா வெற்றி
அங்கு மொத்தம் 243 தொகுதிகள் இருக்கும் நிலையில், என்டிஏ ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. என்டிஏ கூட்டணி கிட்டத்தட்ட 200+ தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக மற்றும் நிதிஷ்குமார் கட்சிகள் அதிகபட்ச இடங்களை அப்படியே அள்ளியுள்ளது. மற்ற கூட்டணிக் கட்சிகளும் கூட கணிசமான அளவு இடங்களை வென்றுள்ளது.
200+ தொகுதிகளில் வென்ற போதிலும் தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெரியளவில் வெற்றி கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை. வழக்கமாக எந்தவொரு மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் டெல்லி பாஜக தலைமையிடத்தில் கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருக்கும். தொண்டர்கள் குவிந்து இருப்பார்கள். பட்டாசு, இனிப்பு என பாஜக அலுவலகமே திருவிழா போல இருக்கும்.
வெறிச்சோடிய பாஜக அலுவலகம்
ஆனால், பீகாரில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற பிறகும் கூட டெல்லி பாஜக அலுவலகம் அமைதியாகவே இருக்கிறது. பாஜக தலைமையில் இருந்து வந்த உத்தரவே அதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கிய போது மேலிடத்தில் இருந்து உடனடியாக உத்தரவு வந்துள்ளது.
என்ன காரணம்
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டிருந்தது. அதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என பாஜக உத்தரவிட்டுள்ளது. மேலும், கட்சி சார்பிலும் கொண்டாட்டங்கள் எதுவும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய நாள் அதாவது கடந்த திங்கள்கிழமை மாலையில் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்தக் கொடூரச் சம்பவம் தீவிரவாதத் தாக்குதல் என்று தெரிய வந்துள்ளது.. இது தொடர்பாக என்ஏஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக என்ஐஏ விசாரணை தொடர்கிறது.
பீகார் தேர்தல்
பீகார் தேர்தலைப் பொறுத்தவரை "இந்தியா" கூட்டணிக்கு இந்த முறை மிக மோசமான தோல்வியே கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த ஆர்ஜேடி கட்சியால் 23 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் வெறும் 3- 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. அதாவது ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி பெறும் வாக்குகளை விட காங்கிரஸ் குறைவான வாக்குகளையே பெறுகிறது.












Click it and Unblock the Notifications